You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டாரா கிரண் பேடி? - ஆளுநருக்கு குவியும் கண்டனங்கள்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிந்துள்ள ட்வீட் ஒன்று நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலன் திட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி கடந்த வாரம் 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட தொடங்கினார்.
தற்போது, 5 நாட்கள் கடந்த நிலையிலும், 6வது நாளாக தர்ணா போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராஜ் நிவாஸ் முன்பு, தனது சகாக்களுடன் சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் முதல்வர் நாரயணசாமியை பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில், இன்று மாலை 5 மணியளவில் தன்னை நேரில் சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கும், அமைச்சர்களுக்கும் நேரம் ஒதுக்கிய ஆளுநர் கிரண் பேடி, இரவு விருந்தில் கலந்துகொள்ளும்படியும் ட்விட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் 'காக்கை யோகா' என்ற தலைப்பிட்டு அவர் பதிவேற்றிய புகைப்படமும், கருத்தும் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
அப்படி என்ன சொன்னார் கிரண் பேடி?
ஆளுநர் மாளிகை அருகேயுள்ள ஒரு மரத்திலிருக்கும் இரண்டு காகங்களை புகைப்படம் எடுத்து, யோகா அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்துடன் அதனை தனது ட்விட்டர் கணக்கில் பதிந்திருந்தார். அதே படத்தை பயன்படுத்தி மேலும் ஒரு ட்வீட்டை பதிவு செய்த கிரண் பேடி, ஒரு ஊடகவியலாளர் தன்னிடம் தர்ணா போராட்டமும் யோகாவா என்ற சுவாரஸ்யமான கேள்வியை கேட்டதாகவும், அதற்கு பதிலளித்த அவர், எந்த விஷயத்துக்காக நாம் யோகா செய்கிறோம், என்ன ஆசனம் செய்கிறோம், அவ்வாறு செய்யும்போது எந்த விதமான ஒலியை உருவாக்குகிறோம் போன்றவைகள் எல்லாம் முக்கியம் என்று கூறியுள்ளார். கிரண் பேடியின் இந்த கருத்துகள் மற்றும் புகைப்படத்திற்கு ட்விட்டர் பயனர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
முதல்வரின் நிறத்தை இழிவு செய்வதா?
பாலிவுட் நடிகை ரிச்சா சதா தனது ட்விட்டர் பதிவில், அண்ணா ஹசாரேவுடன் கிரண் பேடி டெல்லியில் முன்பு மேற்கொண்ட தர்ணா போராட்ட புகைப்படத்தை பதிந்து கிரண் பேடி தன்னை தானே இழிவுபடுத்தி கொள்ளும் நகைச்சுவையை மேற்கொண்டுள்ளார் என்று சாடியுள்ளார்.
புதுச்சேரி அரசை கேவலமான முறையில் நடத்துவது அந்த மக்களையும் சேர்த்துதான் என்று பயன்பாட்டாளர் வேலுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண குமார் என்பவர் தனது ட்வீட்டில், ஆளுநரே உங்கள் கருத்தின் தாக்கத்தை நீங்கள் உணரவில்லை. நீங்கள் உங்கள் எல்லையை மீறிவிட்டீர்கள் என்பதை காட்டுகிறது. உடனடியாக உங்கள் கருத்துக்காக நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்தான் கிரண் பேடி
இன்றைய தினம் முதல்வர் நாரயணசாமியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நாரயணசாமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். டெல்லியில் நிலவும் அதே பிரச்சனைதான் புதுச்சேரியிலும் நிலவுகிறது என்றும், தேர்தலில் டெல்லி மக்களால் தோற்கடிப்பட்டவர்தான் புதுச்சேரியை ஆட்சி செய்கிறார் என்றும் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
காதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :