You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் பெர்னாண்டஸ்: எமர்ஜன்சி காலத்தில் அடைக்கலம் தந்த கருணாநிதி
சோஷியலிஸ்ட் தலைவரும், தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு நீண்டது.
எமர்ஜென்சி காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அடைகலம் தந்திருக்கிறார்.
இது குறித்து பிபிசி தமிழில் திமுக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
பொய்க்காத நம்பிக்கை
"அது 1975 ஆம் ஆண்டு. இந்தியா முழுவதும் போலீசார், உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் - என்னை (பெர்னாண்டஸை) கைது செய்ய தேடுதல் வேட்டையை தொடங்கி இருந்தனர். வட மாநிலங்களில் - மாறுவேடம் பூண்டு நான் தலைமறைவாக திரிந்தேன். எனது இருப்பிடங்கள் தெரிந்து என்னை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வந்து கொண்டே இருந்தனர். இங்கிருந்தால் என்னை எப்படியும் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்தேன்.
அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், அப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.
நம்பிக்கை பொய்க்கவில்லை. சென்னையில் சாந்தோம் பகுதியில் கலைஞர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தேன். சென்னையில் தங்கியிருந்த நாட்களில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் தனது நேரடி கண்காணிப்பில் பார்த்துக்கொண்டார் கலைஞர்" என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் தம்மிடம் கூறியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் ராதாகிருஷ்ணன்.
கைது
"பின்னர் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டேன். மாறு வேடத்தில் ரயிலில் நான் செல்லும் தகவலை, மத்திய உளவுப்பிரிவின் தலைவர் எம்.கே. நாராயணன் எப்படியோ மோப்பம் பிடித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின்படி நான் ஆந்திர மாநிலத்தில் ரயிலில் செல்லும்போது கைது செய்யப்பட்டேன்." என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியதாக கே.எஸ். இராதாகிருஷ்ணன் பதிவு செய்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :