பட்டேல் சிலை சுற்றுலா: சர்ச்சையான முதலைகளை இடமாற்றும் நடவடிக்கை

உலகின் மிகப்பெரிய சர்தார் பட்டேல் சிலையைக்காண விமானம் மூலம், பார்வையாளர்கள் வந்துசெல்வதற்காக கிட்டத்தட்ட 300 முதலைகள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றன.

நீரில் விமானம் வந்திறங்கும் வசதிக்காக சிலை வளாகத்திற்கு அருகிலுள்ள நீர்தேக்கத்திலிருந்து முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றும் பணியை இந்திய அதிகாரிகள் தொடங்கிவிட்டனர்.

9 அடி வரை நீளமுள்ள முதலைகள் சிலவற்றை உலோக கூண்டுக்குள் அடைத்து குஜராத்தின் மேற்கு பகுதிக்கு இவை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம், உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் படேல் சிலை குஜராத்தில் திறந்துவைக்கப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து 200கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிலை, ஒரு பிரபல சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.

அங்கு செல்ல ரயில் சேவை எதுவும் இல்லாததால், `ஒற்றுமையின் சிலை` என்ற அழைக்கப்படும் சிலை பகுதியை சுற்றுலாவாசிகள் பேருந்து மூலமாக வந்தடைகின்றனர்.

`சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக` இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது என்று உள்ளூர் வனத்துறை அதிகாரி அனுராதா சஹூ கூறினார் என்று ஏ.ஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

லாரி, டிரக் போன்ற வாகனங்கள் மூலமாக, இதுவரை 12 முதலைகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாட்டின் வனஉயிர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறார், சமூக அறிவியல் மைய இயக்குநர் ஜித்தேந்திரா கவாலி.

`அரசு முதலைகள் வாழுமிடத்தை தொந்தரவு செய்வதோடு, அவற்றின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இடமாற்றம் செய்யப்படும் முதலைகள் எங்கு பாதுகாப்பாக விடப்படும் என்று அரசு யோசிக்கவில்லை` என்று அவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். 2012ம் ஆண்டு, குஜராத்தின் முதல்வராக அவர் இருந்தபோது, பட்டேல் சிலை செய்வதற்கான திட்டம் தொடங்கியது.

சமீப காலமாக, மோதியின் ஆளும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி, சர்தார் பட்டேல் விட்டு சென்ற பாரம்பரியத்தை தங்களுடையதாக கோர முயற்சிக்கிறது.

இந்த சிலையின் மொத்த மதிப்பு ரூ.29.9 பில்லியன் ஆகும்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் எழுந்த சிலை

இந்த 182 மீட்டர் உயர சிலை, சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. சிலையின் கட்டுமானத்திற்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த சிலை திறந்தபோதுஈ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியினர் முழு கடை அடைப்புக்கு அறிவிப்பு விடுத்திருந்தனர்.

அம்பாஜி முதல் உமர்கம் என்ற கிராமங்கள் அந்த கடையடைப்பில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

சிலை உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் சிலையின் கட்டுமானத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பாக இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சிலையின் கட்டுமானம் முடிந்தவுடன் மாநில அரசால் நடத்தப்பட்ட`ஏக்தா யாத்ரா` என்ற பேரணிக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த பேரணி குறித்து ஒட்டப்பட்ட சுவரோட்டிகளையும் பழங்குடியின மக்கள் கிழித்தெறிந்தனர்.

போஸ்டர்களுக்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின், முக்கியமான மற்றும் வரலாற்று புகழ்மிக்க பழங்குடியின தலைவர் பிஸ்ராமுண்டாவுடன் பிரதமரும், முதல்வரும் இருப்பது போன்ற போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த சிலையின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என பழங்குடியின மக்கள் தெரிவித்திருந்தனர்.

'State of unity' பட்டேல் ராட்சத சிலை: 10 முக்கிய அம்சங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :