''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்

பிரம்மன் சிலை/டைனோசர்

பட மூலாதாரம், Getty Images

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் - ''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' - இந்திய புவியியல் பேராசிரியர்

இந்திய அறிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள பஞ்சாப் பல்கலைகழகத்தின் புவியியல் துறை துணைப் பேராசிரியர் அஷு கோஸ்லா உலகை படைத்த கடவுள் பிரம்மனுக்கு டைனோசர் பற்றி தெரியும் என்றும் மற்றவர்கள் யாரும் சொல்வதற்கு முன்னரே வேதத்திலேயே டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டைனோசர்கள் இருந்துள்ளன. ராஜசுரஸ் எனும் டைனோசர் இந்தியாவைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'' நமது வேதத்தில் இருந்து தான் அமெரிக்கர்களும், பிரிட்டிஷ்காரர்களும் டைனோசர் எனும் விஷயத்தை தெரிந்துகொண்டுள்ளார். 6.5 கோடி வருடத்துக்கு முன்னரே டைனோசர்கள் இருந்திருந்தாலும், கடவுள் பிரம்மனுக்கு உள்ள அளவற்ற ஆன்மீக சக்தி மூலம் டைனோசர்கள் பற்றி அறிந்திருந்தார்.

வேதத்தில் டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். டைனோசர் எனும் வார்த்தையே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. டைனோ என்றால் 'கோரமான' எனப் பொருள் சமஸ்கிருதத்தில் டாயன் என்றால் சூனியநிபுணர் மற்றும் சர் (SAUR) என்பது பல்லியை குறிக்கிறது. சமஸ்கிருதத்தில் அசுர் (ASUR) என்றால் அசுரன்.

ஆகவே பூமியில் இருந்த அனைத்து உயிரினங்களும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது'' எனக்கூறுகிறார் அஷு கோஸ்லா.

பிரம்மன் சிலை

பட மூலாதாரம், Philippe Lissac / Godong

தன் குழுவுடன் இணைந்து குஜராத்தில் கெடா மாவட்டத்தில் இந்திய டைனோசரின் எச்சங்களை கண்டுபிடித்ததாக கூறும் கோஸ்லா, அதற்கு ராஜசுரஸ் என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டதாக விவரித்துள்ளார்.

''2001-ல் நர்மதா நதிக்கரையில் நாங்கள் அவற்றை கண்டுபிடித்தபிறகு சிங்கத்தை குறிப்பிடும் விதமாக ராஜா எனப் பெயரிட்டோம். அதாவது அசைவம் உண்ணும் டைனோசர் அது.

ராஜசுரஸ் வட அமெரிக்காவிலுள்ள டைரனோஸுரசூடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் ராஜசுரஸ் இந்தியாவைச் சேர்ந்தது என நாங்கள் நிரூபித்துள்ளோம்.

வேதம் 25-30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் டைனோசர் குறித்து பிரம்மன் அறிந்திருந்ததாகவும் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டைனோசர் படிமங்களை எடுக்க நான் களத்துக்குச் செல்லும்போது கூட பிரம்மனே எனக்கு உதவு என நான் பிரார்த்தனை செய்வேன். இதே போல ராமாயணத்தில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை தான் அடிப்படையாக கொண்டு ரைட் சகோதரர்கள் விமானம் தயாரித்துள்ளனர்'' எனக் கூறியிருக்கிறார்.

line
சபரிமலை

பட மூலாதாரம், ARUN SANKAR

தினத்தந்தி : சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 9பேர் விபத்தில் மரணம்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 14 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒரு சுற்றுலா வேனில் சென்றனர். சபரிமலையில் தரிசனம் செய்தபிறகு தமிழக கோயில்களில் தரிசனம் செய்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் செல்வதற்காக நேற்று பகலில் வேனில் புறப்பட்டனர்.

நேற்று மதியம் 2.15 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி நோக்கி வந்த ஒரு லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. லாரியும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடியதாகவும். இதில் 9 ஐயப்ப பக்தர்கள் உள்பட 10 பேர் இறந்ததாகவும் அந்நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

line
வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்

பட மூலாதாரம், AFP

தினமணி : வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை - கிரிஜா வைத்தியநாதன்

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் அந்த நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படாது மேலும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று பல துறை தொழிலாளர்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும் நாளையும், புதன்கிழமையும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

இதில் 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்களுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

line

தி இந்து ஆங்கிலம் : ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும்

ஓட்டுநர் உரிமத்துடன் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என சட்டம் மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் தெரிவித்துள்ளார.

''ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். தற்போது விபத்து ஏற்படுத்தும் நபர் போலியாக ஓட்டுநர் உரிமம் பெற்று மீண்டும் வாகனம் ஓட்டுகிறார். இதைத் தவிர்க்க ஆதார் இணைப்பு உதவும்.

ஆதார் இணைப்பு செய்தும் முறைகேடு செய்ய முயற்சித்தால் சம்பந்தப்பட்ட நபர் பெயர் மாற்றம் செய்துவிட முடியும் ஆனால் ரேகைகளை மாற்ற முடியாது. ஆகவே போலி ஓட்டுநர் உரிமம் பெற முயன்றால், புதிய அமைப்பு ஏற்கனவே உங்களிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதை காட்டிக்கொடுத்து விடும்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: