தோற்றாலும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுக்கும் மமதா - அரசமைப்பு கூறுவது என்ன?

மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல், மமதா பானர்ஜி, இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோல்விக்கான ஆதாரம் கிடைத்திருந்தால், தான் பதவி விலகியிருப்பேன் என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், தான் தேர்தலில் தோற்கவில்லை எனக் கூறும் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி, தான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாஜக நியாயமற்ற வழிகளில் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பாஜக, அரசமைப்பு சட்ட நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தவொரு தனிநபரும் இப்படிப் பேச மாட்டார்கள் என்று தெரிவித்தது.

மமதா மற்றும் பாஜக சொல்வது என்ன?

பதவியில் இருந்து விலக முடியாது என்று கூறும் மமதா பானர்ஜி, "நான் ஏன் பதவியை விட்டுச் செல்ல வேண்டும்? நாங்கள் தோற்றுப் போகவில்லை. தோல்விக்கான ஆதாரத்தைக் கொடுத்தால் நான் ராஜினாமா செய்வேன். யாரோ கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காகப் பதவி விலக முடியாது. இப்போது நான் ராஜினாமா செய்ய மாட்டேன். நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்," என்கிறார்.

இந்தத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸின் தோல்விக்குத் தேர்தல் ஆணையமே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், தேர்தல் ஆணையமே இந்தப் போக்கிற்கு முக்கிய "வில்லன்" என்றும் குறிப்பிட்டார்.

மேலும், "கட்சி உறுப்பினர்களுடன் அடுத்தகட்ட வியூகம் குறித்து விவாதிக்கப்படும். இனி பாஜகவின் அராஜகங்களை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மீண்டும் வீதியில் இறங்கிப் போராடுவேன்," என்று மமதா பானர்ஜி கூறினார்.

மமதா பானர்ஜியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவின் மேற்கு வங்கப் பிரிவு எதிர்வினையாற்றியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் தேப்ஜித் சர்க்கார், "மமதா பானர்ஜி பேசுவதைப் பார்த்தால் அவர் தன்னைத் தானே நகைச்சுவைப் பொருளாக மாற்றிக் கொள்வது போல் இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிப் பேசுகிறார். இத்தகைய கேலிக்குரிய பேச்சுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியோ அல்லது அரசமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட எந்தவொரு கட்சியோ பதில் அளிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும், "அரசமைப்பு நடைமுறையில் நம்பிக்கை கொண்ட எவரும் இப்படியான கருத்துகளைத் தெரிவிக்க மாட்டார்கள்" என்று கூறினார்.

மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல், மமதா பானர்ஜி, இந்திய அரசியலமைப்புச் சட்டம், பாஜக

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பதவி விலக மறுக்கும் மமதாவின் குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த பாஜக

அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 164, மாநில அமைச்சரவை உருவாக்கம் மற்றும் அதில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி விளக்குகிறது. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளுடைய பலத்தின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன் பின்னரே பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அமைச்சரவையில் இடம்பெறும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் சட்டமன்ற உறுப்பினராக இல்லையென்றால், அவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் அவர் உறுப்பினராகாவிட்டால், எந்தவொரு காரணத்திற்காகவும் அவர் அமைச்சர் அல்லது முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது.

அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 164(1), முதலமைச்சர் 'ஆளுநரின் விருப்பம் இருக்கும் வரை' பதவியில் நீடிக்கலாம் என்று கூறுகிறது.

ஆளுநரின் 'விருப்பம் என்றால் என்ன?' என்ற நுணுக்கமான கேள்விக்கான பதிலை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் சுதிர் கே. சுதார் விளக்கமாகக் கூறுகிறார்.

"ஆளுநரின் 'விருப்பம்' என்பது சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பெரும்பான்மையாக எந்தத் தலைவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அமையும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஆளுநர் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மதிப்பாய்வு செய்து, பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார்" என்று அவர் விளக்கினார்.

மேலும், "ஒருவேளை பதவியில் இருக்கும் முதலமைச்சர் ராஜினாமா செய்ய மறுத்தால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையைப் பதவிநீக்கம் செய்யலாம்" என்கிறார் அவர்.

இதுதவிர, இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 172, மாநில சட்டப்பேரவைகளின் (சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை) பதவிக்காலம் பற்றிப் பேசுகிறது. இதன்படி, ஒரு சட்டப்பேரவையின் பதவிக்காலம் அதன் முதல் கூட்டத்தில் இருந்தே ஐந்து ஆண்டுகள் ஆகும். ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததும் அது தானாகவே கலைந்துவிடும்.

பிரிவு 172இன் படி, "ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகக் கலைக்கப்படாவிட்டால், அதன் முதல் கூட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும், ஐந்து ஆண்டு காலம் முடிவடைந்தவுடன் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்; அதற்கு மேல் நீடிக்காது."

மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல், மமதா பானர்ஜி, இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பட மூலாதாரம், ANI

நிபுணர்கள் சொல்வது என்ன?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய 'விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசி' அமைப்பின் அரசமைப்பு சட்டப் பிரிவுத் தலைவர் ஸ்வப்னில் திரிபாதி, "நமது அரசமைப்புக் கட்டமைப்பின்படி, பிரிவு 164-இன் கீழ் மாநில ஆளுநரின் விருப்பத்தின் பேரில் முதலமைச்சர் பதவியில் இருக்கிறார். ஆனால் இந்த 'விருப்பம்' என்பது தனிப்பட்டது அல்ல; இது முதலமைச்சர் சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றுள்ளாரா இல்லையா என்பதுடன் தொடர்புடையது" எனக் குறிப்பிட்டார்.

"தேர்தல் முடிந்து சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன், புதிய சட்டப்பேரவை உருவாக்கப்படுகிறது. அதனுடன், 'நம்பிக்கை வாக்கு' என்பது புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் சென்றுவிடுகிறது."

பதவியில் இருக்கும் முதலமைச்சர் ராஜினாமா செய்வதும், புதிய அரசு பதவியேற்கும் வரை தற்காலிக முதலமைச்சராகப் பணியாற்றுவதும் அரசமைப்பில் நிலைநாட்டப்பட்ட ஒரு மரபு என்று அவர் கூறினார்.

மேலும், "இந்த மரபு பின்பற்றப்படாவிட்டாலும், சட்டபூர்வ நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆளுநர் தனது 'விருப்பத்தை' திரும்பப் பெறலாம் மற்றும் புதிய சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்ற தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கலாம். எனவே, ராஜினாமா செய்ய மறுப்பது என்பது சட்டத்தைவிட அரசியலுடன் தொடர்புடைய விஷயமாகிவிடுகிறது" என்று ஸ்வப்னில் திரிபாதி கூறுகிறார்.

"பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒரு முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அரசமைப்பு உறுதி செய்கிறது. தேர்தல் முடிவுகள் பழைய ஆணையை முடிவுக்குக் கொண்டு வருகின்றன. ராஜினாமா என்பது அதை அங்கீகரிக்கும் ஒரு முறை மட்டுமே."

அரசமைப்பு சட்ட நிபுணரும், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளருமான பி.டி.டி. ஆச்சார்யா இந்தியா டுடேவிடம் கூறுகையில், "தற்போது மமதா பானர்ஜி பதவியில் நீடிக்க அனுமதிக்கும் எந்தவித வாய்ப்பும் சட்டத்தில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம், போராட்டங்கள், மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல், மமதா பானர்ஜி, இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான போராட்டங்கள்

"மமதா பானர்ஜி பதவி விலகாவிட்டாலும், அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. வேண்டுமானால் அடுத்த முதலமைச்சர் பதவியேற்கும் வரை, அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொள்ளலாம். இருப்பினும், எந்தவொரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நீடிக்க இயலாது என்று அரசமைப்பு விதிகள் வரையறுக்கின்றன" என அவர் கூறுகிறார்.

மமதா பானர்ஜி இன்றே பதவி விலகினாலும்கூட, புதிய முதலமைச்சர் பதவியேற்கும் வரை அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொள்வார் என்று ஆச்சார்யா குறிப்பிட்டார்.

"தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், அவர் பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை. இந்திய அரசமைப்பின் விதிகளின்படி, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை மட்டுமே அவரால் முதலமைச்சராகப் பணியாற்ற இயலும். அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியில் இருந்து நீங்கிவிடுவார்" என்று பி.டி.டி. ஆச்சார்யா தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு