பிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு - எப்படி?

plastic road
படக்குறிப்பு, பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளி
    • எழுதியவர், பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

"பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும்."

உலகமே பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அச்சுறுத்தலாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

plastic waste
படக்குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகள்

இந்நிலையில் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும் கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஈரச் செயல்முறை மூலம் தொலைதூர கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் சாலை

பிளாஸ்டிக் சாலைகளை அமைக்க தொடக்கப்பணியாக கரூர் மாவட்டத்தில் அரசின் உதவியுடன் சுய உதவிக் குழுக்கள் மூலம் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கிலோ ஒன்றுக்கு ரூ. 6 முதல் 10 வரை இந்த நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

plastic waste
படக்குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணி

இதன் பின்னர் இந்தக் கழிவுகள் நறுக்கும் இயந்திரத்தின் மூலம் சிறிய சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மாற்றப்படுகின்றன.

இதனையடுத்து டைஜெஸ்டர் எனப்படும் இயந்திரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் துகள்களுடன் வெப்பநிலையை நிலைப்படுத்த விவசாயத்தில் இருந்து கிடைக்கும் ஒரு திரவத்தையும் சேர்க்கின்றனர். பின்னர் இதனுடன் தார் சேர்க்கப்பட்டு ஒரு கலவையாக இறுதி வடிவம் பெறுகிறது.

plastic waste
படக்குறிப்பு, பிளாஸ்டிக் துகள்கள்

இதன் மூலம் தான் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியுமா?

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும் என்கிறார் சிஎம்ஆர் பிட்பிளாஸ்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன்.

plastic road
படக்குறிப்பு, வெங்கட சுப்பிரமணியன் - தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் (CMR Bitplast)

"கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும். மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் 2000 முதல் 2500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும். இதே போன்று தேசிய நெடுஞ்சாலைகளில் 4000 கிலோ முதல் 8000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும்" என்கிறார் வெங்கட சுப்பிரமணியன்.

பிளாஸ்டிக் சாலைகளின் உறுதித் தன்மை

ஈரச் செயல்முறை மூலம் அமைக்கப்படும் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மற்ற சாலைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

plastic road
படக்குறிப்பு, பிளாஸ்டிக் சாலை

இந்திய சாலை கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த பிளாஸ்டிக் சாலைகளுக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உறுதித் தன்மைக்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

plastic road
படக்குறிப்பு, நாகராஜன் - இயக்குநர் (CMR Bitplast)

"மற்ற சாலைகளின் உறுதித் தன்மை மூன்று ஆண்டுகள் என்றால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைக்கும். மழையால் ஏற்படும் பள்ளங்களை இந்த சாலைகளில் பார்க்க முடியாது" என்கிறார் சிஎம்ஆர் பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) நிறுவனத்தின் இயக்குநர் நாகராஜன்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

விரிவுபடுத்தப்படும் பிளாஸ்டிக் சாலைகள்

தற்போது கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் அமைக்கப்பட்டு வரும் இந்த பிளாஸ்டிக் சாலைகளை தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

plastic road
படக்குறிப்பு, சடையப்பன் - கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர்

"பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 150 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கவுள்ளோம். மேலும் தமிழக அரசும் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் 400 முதல் 500 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும்" என்கிறார் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் சடையப்பன்.

plastic road
படக்குறிப்பு, பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த பிளாஸ்டிக் சாலைகளும் ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: