You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் உள்ள எந்தக் கணினியையும் கண்காணிக்க 10 அரசு முகமைகளுக்கு அனுமதி
இந்தியாவிலுள்ள எந்தக் கணினியையும் ஆய்வு செய்து அதிலுள்ள தகவல்களை யாருடைய அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு 10 அரசு முகமைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது, ஜனநாயகமற்ற மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அரசின் இந்த உத்தரவின்படி, கணினிகளை நிர்வகிப்பவர்கள் அதை மத்திய அரசின் முகமைகள் கண்காணிப்பதற்கு ஒத்துழைப்பதற்கு மறுத்தால் அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கணினிகளை மேலாண்மை செய்யவேண்டியுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இந்த நிலைப்பாடு, இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தின்போதே அறிவிக்கப்பட்டதாகவும், தாங்கள் அந்த அறிவிப்பை மீண்டும் வெளியிட்டுள்ளதாகவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து கணினிகளிலும் வைக்கப்பட்டுள்ள தகவல்களை கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட 10 மத்திய முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை மீதான தாக்குதலாகவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பார்க்கிறோம். அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நேரெதிராக அரசு நடக்கிறது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு நாட்டின் பாதுகாப்புக்காக என்றால், ஏற்கெனவே அதற்காக பல வழிவகைகள் இருக்கிறதே. இந்நிலையில், எதற்காக அனைத்து மக்களும் பாதிக்கப்பட வேண்டும்? மக்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை 2014ம் ஆண்டு முதல் நிலவுகிறது. அதிலும் கடந்த 2 மாதங்களாக மோடி அரசு அனைத்து எல்லைகளையும் மீறி, ஒவ்வொரு இந்தியரின் கணினியையும் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை நசுக்குவதைப் பொறுக்க முடியுமா?" எனத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்