முக்கிய செய்திகள்: 99 வயது முதியவரை நிலத்தை பிடிங்கிக்கொண்டு வீட்டை விட்டு விரட்டியவர் மீது நடவடிக்கை

முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்றை வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

தினத்தந்தி : 99 வயது முதியவரை வீட்டை விட்டு விரட்டியவர் மீது நடவடிக்கை

திண்டுக்கல்லில் ஒரு முதியவர் தனது நிலத்தை அபகரித்துக்கொண்டு அடித்து விரட்டியதாக ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். கருதனம்பட்டியைச் சேர்ந்த பெருமாளுக்கு 2 மகன்கள், 3மகள்கள்.

மனைவி இறந்தபிறகு தனது இரண்டாவது மகனுடன் தமது வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது மகன் ஆசைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று தனது வீட்டை எழுதிக்கொடுத்த முதியவர், தன்னை ஏமாற்றி தனது மகன் 1 ஏக்கர் 15 சென்ட் நிலத்தையும் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் அதன் பின்னர் உணவு தராமல் வீட்டை விட்டு விரட்டியதாகவும் தன் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்.

இந்நிலையில் நிலத்தின் பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் அதில் தமக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பதால் தமது நிலத்தின் பத்திரத்தை மகனிடம் கேட்கச் சென்றபோது அடித்து உதைக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - மூதாட்டியை அறைந்த காவல் ஆய்வாளருக்கு அபராதம்

சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 2017இல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தம்மைச் சந்திக்க வந்த மூதாட்டியை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர், அவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாசுகி எனும் அந்த மூதாட்டியை அறையவில்லை என்றும் அவர் காவல் அதிகாரிகள் மீது பொய் புகார் கொடுக்கப்போவதாக அச்சுறுத்தினார் என்றும் ஆய்வாளர் சிதம்பர பாரதி மறுத்திருந்தார்.

தினமணி : காவல் துறையினர் மீது 66 மனித உரிமை மீறல் வழக்குகளில் நடவடிக்கைக்கு பரிந்துரை

கடந்த ஓராண்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்த 67 வழக்குகளில் 66 வழக்குகள் காவல்துறையினர் மீதானவை என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் மனித உரிமை மீறல் தொடர்பாக மாதம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 67 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தி இந்து தமிழ் - மதுரை சிறையில் கைதிகள் மரணம் அதிகரிப்பு

மதுரை மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளில் கைதிகளின் மரணம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 'இந்தியன் குரல்' என்ற அமைப்பைச் சேர்ந்த எம்ஜி. மோகன் மதுரை மத்திய சிறை குறித்து 11-க்கும் மேற்பட்ட தகவல்களை கேட்டிருந்தார். இதற்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

இதன் மூலம் 2017, 2018-ல் கைதிகளின் மரணம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரும் பாலானோர் உடல்நலம் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை என, பொது தகவல் அளிக்கும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: