You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் கோட்டைவிட்ட பாஜக-வுக்கு மக்களவை சவால் எப்படி இருக்கும்?
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
இவற்றில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக உள்ள ராஜஸ்தானிலும், மூன்றாவது முறையாக பாஜகவின் ரமன் சிங் முதல்வராக உள்ள சத்தீஸ்கரிலும் மூன்று முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்த மற்றொரு பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் அந்தக் கட்சி தோல்வியை சந்தித்தது. ஆனாலும், காங்கிரஸால் மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரைப் போல பெரிய அளவில் பெரும்பான்மை பெற முடியவில்லை.
பாஜக-வின் இந்துத்துவக் கொள்கைக்கு ஆதரவானவையாகக் கருதப்படும் இம்மூன்று மாநிலங்களில் பாஜகவின் தோல்வி, சில மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலித்தால், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அந்தக் கட்சியின் கனவு நனவாவதற்கு சவாலாக மாறும். இந்த மூன்று மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 65. பாஜக-வுக்கு தமது கோட்டையில் உள்ள இந்த 65 தொகுதிகள் என்பது பெரிய எண்ணிக்கையாக இருக்கும்.
அதே நேரம், வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ். தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும்கூட காங்கிரஸால், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்த முடியவில்லை.
முன்கூட்டியே தேர்தல் நடத்தியதின் மூலம் தாம் சாதிக்க விரும்பியதை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் சாதித்துவிட்டார். தெலுங்கு தேசத்துடன் அமைக்கும் கூட்டணி காங்கிரசுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் உதவலாம். ஆனால், தெலங்கானாவில் உதவாது என்ற உறுதியான தகவலையும் காங்கிரசுக்கு அவர் அளித்துள்ளார்.
இத்துடன், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றை தமது கூட்டணிக்குள் ஒருங்கிணைக்க முடியாத நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இரு மாநிலங்களில் சௌகரியமான பெரும்பான்மை பெற முடியாத நிலை, அந்த இரு கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான தேவையை காங்கிரசுக்கு உணர்த்தும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தாம் அமைக்கும் பிரம்மாண்ட கூட்டணித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உணரவும், சரி செய்யவும் காங்கிரசுக்கு இது வாய்ப்பளிக்கும்.
பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் கூறியபடி, கடந்த தேர்தலில் பாஜக வென்ற இடங்களில் தற்போது இழந்துள்ளது. அது கடந்த தேர்தலில் வெல்லாத மிசோரம், தெலங்கானா போன்ற இடங்களில் அதனால் புதிய பலம் எதையும் பெற முடியவில்லை.
இந்நிலையில், முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசுக்கு பெரிதும் தேவைப்பட்ட உளவியல் ஊக்கத்தை இந்த தேர்தல் அவர்களுக்கு வழங்கும்.
அதைப்போலவே, ஆட்சிக்கெதிரான உணர்வுகளை இனம்கண்டு மக்களைக் கவரும் செயல்பாடுகளை கடைசி நேரத்தில் முன்னெடுக்க ஒரு வாய்ப்பை மத்தியில் உள்ள பாஜக-வுக்கும் இந்த தேர்தல் வழங்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: