You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நரேந்திர மோதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வழிவகை செய்வார்'
- எழுதியவர், பைசல் மொஹமத் அலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய தர்ம சபைக்கு எதிர்பார்த்த கூட்டம் கூடவில்லை.
ஆனால், ராமர் கோயில் கட்ட சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்து அமைப்புகள் மற்றும் சாதுக்கள் சிலரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு பிறகு ஏதேனும் நடக்கலாம் என்று உறுதி அளிக்கின்றனர்.
"ராமர் கோயிலை கட்டுவதற்கு பிரதமர் மோதி வழிவகை செய்வார் என்று அவரது அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இதனை சொல்கிறேன். அவசர சட்டம் கொண்டுவரப்படலாம் அல்லது வேறு ஏதாவது நடக்கலாம்," என்று நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட அதே அறிக்கையை மீண்டும் பிபிசியிடம் தெரிவித்தார் இந்து தர்மகுரு ஸ்வாமி ராம் பத்ராச்சார்யா.
அதில்,நரேந்திர மோதி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த விவகாரத்தில் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அயோத்தி தர்ம சபை மாநாடு நடந்த இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கும் ராஜஸ்தானின் ஆல்வாரில் பிரதமர் மோதியும், மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக பலவற்றையும் கூறினார்கள்.
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் இருந்து மக்களவை உறுப்பினர் பிரஹலாத் வெங்கடேஷ் மற்றும் மாநிலங்களவை நியமன உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தயாரித்த தனி உறுப்பினர் மசோதாவும் இதன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட ராகேஷ் சின்ஹா, தற்போது பாஜகவின் உறுப்பினர் ஆவார்.
'... தனிப்பட்ட முறையில் முன்னெடுப்பு'
மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து நேர்மறையான பதில் ஏதும் வரவில்லை என்பதால், நாடாளுமன்றத்தில் தனது மசோதாவை தாக்கல் செய்யும் நோக்கத்தை தள்ளிப்போட்டுள்ளதாக ராகேஷ் சின்ஹா கூறுகிறார். ஆனால், மக்களவை சபாநாயகர் அலுவலகத்திற்கு தனது மசோதாவை அனுப்பி வைத்துள்ளதாக பிரஹலாத் வெங்கடேஷ் ஜோஷி தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகரின் பதிலுக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். பதிலை பொறுத்தே, குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதிக்கப்படுமா இல்லையா என்பது தெரியும்.
தனது நாடாளுமன்ற தொகுதியில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று மேலும் கோரிக்கை வைக்கப்படுவதால், தனி உறுப்பினர் மசோதா தாக்கல் செய்யலாம் என்ற யோசனை தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார். இது அவரது தனிப்பட்ட முடிவே தவிர, கட்சி சார்ந்தது கிடையாது.
வெங்கடேஷ் ஜோஷியின் மசோதா தனிப்பட்ட முறையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாஜ்பேயி அரசில் அமைச்சராக இருந்த மற்றும் பா.ஜ.வின் செய்தித் தொடர்பாளருமான ஷானவாஸ் ஹூசைன் தெரிவித்தார்.
இந்து அமைப்புகள் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் அல்லது சட்டம் கொண்டுவர வலியுறுத்துவது தொடர்பாக கூறிய ஷானவாஸ் ஹூசைன், "அது அவர்கள் உரிமை" என்றார்.
கடந்த அக்டோபரில் இருந்து பல்வேறு இடங்களில் மதக் கூட்டங்கள் நடத்திவரும் விஷ்வ இந்து பரிஷத், ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் ஒரு மதக்கூட்டத்தை நடத்த உள்ளது.
வி.எச்.பி-ஐ பொறுத்த வரையில், டெல்லியில் நடைபெறும் இக்கூட்டம் 'கோவில் கட்ட சட்டம் கொண்டுவர வேண்டும்' இயக்கத்தின் மூன்றாவது கட்டமாகும். முதல் கட்டத்தில் வி.எச்.பி, சாதுக்கள் மூலமாக குடியரசுத்தலைவரிடம் இது தொடர்பாக மனு அளிப்பது, ஆளுநர்கள் மற்றும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது ஆகியவற்றை செய்து முடித்தது.
ஆளும் மற்றம் எதிர்கட்சியினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவருவதற்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்திருப்பதாக அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளரான சுரேந்திர ஜெயின் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக ராமர் கோவில் தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. நீதிமன்றத்தால் இந்த விவகாரத்தை சரி செய்ய முடியாது, அதனால் ராமர் கோவில் கட்ட விரைவாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்" என்றார்.
'அரசியல் நகர்வு'
ராம் பத்ராச்சார்யா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதமர் மோதி, மற்றும் பல கூட்டங்களை நடத்தி வரும் வி.எச்.பி, இவர்கள் கூறியது எல்லாம் அர்த்தமற்றதாக இருக்காது என்கிறார் 'Ayodhya The Dark Knight' புத்தகத்தின் இணை ஆசிரியர் திரேந்திர ஜா.
நவம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, அயோத்தியில் சாதுக்கள் கூட்டம் நடைபெற்ற அதே வேளையில்தான், தேர்தல் கூட்டத்தில் பேசிய மோதி, ராமர் கோயில் கட்டும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இழுத்துக் கொண்டே போவதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்று கூறினார்.
மறுபக்கத்தில், அதே நாளில் நாக்பூரில் வி.எச்.பி நடத்திய ஹூன்கர் பேரணியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் விவகாரத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தால் சமூகத்தின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது என்பதால், ராமர் கோவில் கட்ட இப்போது சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார்.
"தற்போது மோதி-ஷா-பகவத் ஆகியோரரிடையே 100 சதவீதம் ஒற்றுமை உள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்று போல பேசும்போது, அதனை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நாக்பூர் எழுத்தாளரான திலீப் தியோதர்.
இந்நிலையில், அரசியல் ஆய்வாளரான அஜய் சிங் கூறுகையில், "பாபர் மசூதி-ராமர் கோயில் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இந்த விவகாரத்தில் சட்டம் கொண்டு வரும் தவறை மத்திய அரசு செய்யாது. மேலும், மதக் கூட்டங்கள் நடத்தி, பேசி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படக் கூடாது, அது அவர்களின் இருப்பை காண்பித்து கொள்வதறகான முயற்சி" என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது என்று கூறும் அரசியல் சாசன வல்லுநர்கள், அப்படி சட்டம் கொண்டுவரப்பட்டால் உடனடியாக அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறுகின்றனர்.
மேலும், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால், அவசர சட்டம் கொண்டு வருவது என்பது மத்திய அரசுக்கு கடினமானதாக இருக்கலாம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்படுவது 'அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெறும் ஓர் அரசியல் நகர்வு' என்று கூறப்படுகிறது. அப்போதுதான் இந்த விவகாரத்தில் கடுமையான முயற்சி எடுத்ததாகவும், மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாததால் சட்டம் கொண்டுவர இயலவில்லை என்றும் மோதி அரசாங்கத்தால் சொல்ல முடியும்.
இந்த சட்டம் கொண்டு வருவதன் மற்றொரு அம்சம், இதனை வைத்தே வரும் நாட்களில் அரசியல் கூட்டணி அமைப்பதை வைத்து முடிவெடுக்க முடியும். அப்படி பார்த்தால், மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதில் காங்கிரசிற்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்த்தால், காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று குற்றஞ்சாட்டி பாஜக கூக்குரல் எழுப்பும். காங்கிரஸ் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தால், முஸ்லிம் ஆதரவாளர்கள் இருக்கும் கட்சிகள் காங்கிரசின் கைவிட்டு போகும் நிலை ஏற்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்