You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜ புயல்: மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை, பேரிடர் மீட்புப் படை தயார்
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜ புயல் தற்போது நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 15ம் தேதி பிற்பகலில் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி நவம்பர் மாதம் 15-ம் தேதி காலை முதல் புயல் கரையை கடக்கும்.
கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் 15ம்தேதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதனை தெடர்ந்து மீனவர்கள் 15 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 14, 15 ,16, 17 தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட முன்னெச்சரிக்கையாக கேப்டன் பிரமோத் மீனா தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் இன்று ராமநாதபுரம் வந்தடைந்தனர். 25 பேர் கொண்ட இந்த குழுவினர் புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.
இவர்களிடம் ஆபத்து காலத்தில் பயன்படுத்தக்கூடிய படகு, மெட்டல் கட்டர், வுட் கட்டர், ரம்பம் போன்றவைகளும், ரப்பர் படகு போன்றவைகளும் உள்ளன. மேலும் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் இந்தியக் கடலோரகாவல் படை கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாம்பன் துறைமுகத்தில் கடந்த மூன்று தினங்களாக இரண்டாம் நிலை புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதாக என மாவட்ட அட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மாவட்டத்தில் 39 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கனமழை பெய்தால் அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள், மாவட்டம் முழுவதும் 23 புயல் காப்பகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கஜ புயலிலிருந்து மீனவர்களின் படகுகளை பாதுகாக்க பாம்பன் தூக்குபாலம் வழியாக மண்டபம் ,பாம்பன், ராமேஸ்வரம், ஓலைக்குடா ஆகிய பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள நாட்டு படகு மற்றும் விசை படகுகளை மன்னார் வளைகுடா கடல் பகுதியானா பாம்பன்; தெற்வாடி மற்றும் குந்துகால் பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதற்காக நாளை பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து பாம்பன் மீன்பிடி தொழிலாளர் ஜெயப்பிரகாசம் கூறுகையில், பாம்பனில் வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்படுவதாகவும் மரங்கள் கூட அசைவில்லாமல் இருக்கிறது. இது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடி தொழிலாளர்கள், கோடிக்கணக்கான மதிப்பிலான எங்களது படகுகள் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆகவே அரசு எங்களது உயிர்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல எங்களது உடமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து மாவட்டத்தில் சுமார் 1800க்கு மேற்ப்பட்ட விசைபடகுகளும் சுமார் 3 ஆயிரதிற்கு மேற்பட்ட நாட்டுபடகுகளும் இன்று மூன்றாவது நாளாக மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடையால் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்துள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தார்.
கஜ புயல் பாதுகாப்பு மற்றும் மீட்புபணியில் பயிற்சி பெற்ற 600 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி கூறுகையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் புயல் மீட்பு பணிகளில் ஈடுபட பயிற்சி பெற்ற 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அது தவிர 600 போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் இரண்டு நாட்களுக்கு தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடலோர போலீசார் ஆகியோரும் பணியில் எங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :