ஒடிஷாவில் டிட்லி புயல் - 100க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்): ஒடிஷாவில் டிட்லி புயல் - 100க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு

ஒடிஷாவில் டிட்லி புயல் ஏற்படுத்திய சேதத்தில், 100க்கும் மேற்பட்ட ஸ்டார்க் பறவைகள் உயிரிழந்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜகனாதபூர் ரயில் நிலையம் அருகிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் பல பறவைகள் காயமடைந்திருக்கின்றன.

ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள நிலங்களில் இறந்த பறவைகள் பரவி கிடந்தன. நாய்கள் போன்றவை தாக்காமல் இருக்க, காயமடைந்த பறவைகள் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிகிறது. அருகில் உள்ள கிராம மக்கள் பறவைகளுக்கு உதவ முயன்றும் முடியாமல் போனதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

கேரள வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் படகு இல்லங்கள்

தினமலர் : ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா கோரிய மனு தள்ளுபடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாக உள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.

தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் அதனை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயகுமாரின் மகன் தீபக், அவரது புகழை சுர்குலைக்க அம்ருதா விரும்பதாக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், "சோபன்பாபு - ஜெயலலிதாவிற்கு தான் பிறந்நதாக மனுதாரர் கூறுகிறார். ஏன் இதை முதலில் மனுதாரர் வெளிப்படுத்தவில்லை? மனுதாரரின் இதுபோன்ற செயல் மற்றும் தீபா, தீபக் அமைதியாக இருப்பதை பார்க்கும்போது, ஜெ.,வின் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான நோக்கத்திற்கு மறைமுகமான செயல்பாடாக இருக்குமோ என கருதத் தோன்றுகிறது.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் ஜெ., இருந்த போது இட்லி சாப்பிட்டார் என கூறுகின்றனர். தவறான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் ஜெ.,விடம் நலம் விசாரிக்கச் சென்று காத்திருந்தவர்களை மற்றும் அப்போலோ மருத்துவமனையை வில்லன்கள் போல் சித்தரித்து விட்டனர். ஜெ., மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. ஜெ., மகள் என்பதற்கு மனுதாரர் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்" என அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி இந்து தமிழ்: #MeToo இயக்கத்தில் தெரிவிக்கப்படும் பாலியல் புகாரை விசாரிக்க குழு

#MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க சட்ட நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்ததாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"#MeToo இயக்கத்தின் மூலம் ட்விட்டரில் பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகின்றனர். அவற்றை நான் நம்புகிறேன். புகார் தெரிவிப்போரின் வலியையும் வேதனையையும் உணர்கிறேன். தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளையும், மோசமான அனுபவங்களையும் வெளியே சொல்வதற்கு அதிக அளவில் பெண்கள் முன்வரவேண்டும்.

#MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்பது எனது யோசனை" என அச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: