You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அ.தி.மு.க.வை விமர்சிக்க பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை'
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'அ.தி.மு.க.வை விமர்சிக்க பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை'
ஹலோ எப்.எம் நிகழ்வொன்றில் கல்ந்துகொண்ட அ.தி.மு.க. மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான பொன்னையன் "அ.தி.மு.க.வை விமர்சிக்க பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை" என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
அப்போது, தி.மு.க. மத்தியில் கூட்டணியில் இருந்தபோது நடைபெற்ற இனப்படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மூலம் தற்போது நேரடி ஆதாரம் வெளியாகி உள்ளதால் அதன் நீட்சியாகவே அ.தி.மு.க. போராட்டம் நடத்தியது. அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கிடையாது என்று பொன்னையன் கூறினார் என்கிறது அந்நாளிதழ் செய்தி.
வருமான வரி சோதனைகள் நடப்பது இயல்பான ஒன்றுதான். விசாரணை முடிவில், குற்றம் செய்திருந்தால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். அதற்கு முன்பே அவர்களை பதவி விலக சொல்வது அறியாமை. பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்கள் உள்பட மத்திய அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. அ.தி.மு.க.வை பற்றி விமர்சிக்க பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '12 % அதிக மழைக்கு வாய்ப்பு'
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வழக்கத்தைவிட அதிகமாக 12% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
தமிழகத்தில் பெய்யும் மொத்த மழை அளவில் வடகிழக்கு பருவமழை மட்டும் 48 சதவீதமாகும். இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
இந்து தமிழ்: "பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி"
கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கரிடம் பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பில் பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். அமைச்சர் பதவி கேட்டு, அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சிப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான லட்சுமி ஹெப்பாள்கர் நேற்று பெல்காமில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெல்காம் மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
அப்போது மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் எனக்கு ரூ.30 கோடி ரொக்க பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். ஆனால் இந்த தொலைபேசி அழைப்பை பதிவு செய்து, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அனுப்பினேன்.
பாஜகவினர் என்னிடம் நடத்திய பேரம் குறித்து ஆதாரத்துடன் விரைவில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். பாஜகவின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, ஒரு போதும் காங்கிரஸை விட்டு விலக மாட்டேன். ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதியை அம்பலப்படுத்தவே தற்போது இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி: "ரஃபேல் ஒப்பந்தம்: காங்கிரஸ் நடைமுறைகளையே பின்பற்றினோம்"
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நடைமுறைகளைத்தான் பின்பற்றினோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் 4 முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தமே பின்பற்றப்படுகிறது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தது காங்கிரஸ் அரசுதான். இந்த ஒப்பந்தத்தில், அரசு அல்லது தனியார் நிறுவனத்துடன் செல்லலாம் என மாற்றியது காங்கிரஸ் அரசு தான். இந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்