மறிமானின் ரகசிய வாழ்க்கை: சுவாரஸ்ய தகவல்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

மறிமானின் ரகசிய வாழ்க்கை

உலகின் மிகப்பெரிய மறிமான் முதல் முறையாக உகாண்டா காட்டில் கேமிராவில் சிக்கி உள்ளது. காங்கோ குடியரசை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் இந்த மறிமான் வாழ்கிறது. உலகின் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் இந்த மறிமானும் ஒன்று.

மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்த மறிமான்களின் எண்ணிக்கை 30,000 ஆயிரமாக குறைந்துள்ளது. செமுலிக்கி தேசிய பூங்காவில் வனவிலங்குகளை கணக்கெடுத்தபோது கேமிராவில் இந்த மறிமானும் சிக்கி உள்ளது. அந்த பூங்காவில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட கேமிராவிலிருந்து 18 ஆயிரம் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அவற்றில் யானை, குரங்கு, சிறுத்தை என பல்வேறு வனவிலங்குகளின் படம் சிக்கி உள்ளது. இதனுடன் மறிமானின் படமும் கிடைத்துள்ளது. "இந்த புகைப்படத்தை பார்க்கும் போது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் மறிமான் இங்கு ரகசியமாக வாழ்ந்து வந்திருக்கிறது" என்கின்றனர் இந்த கணக்கெடுப்பில் பங்குபெற்றவர்கள்.

விபத்துக்குள்ளான போர் விமானம்

பெரும் செலவில் உருவாக்கப்பட்ட அமெரிக்க போர் விமானம் எஃப் - 35 முதல்முறையாக விபத்துக்கு உள்ளாகி உள்ளது. தெற்கு கரோலினா கடல் பகுதியில் அவ்விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விமானிகள் எந்த காயமும் இல்லாமல் தப்பிவிட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே விலை உயர்ந்த போர் விமானம் இது.

தொடரும் நில அதிர்வு

இந்தோனீசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டஜன் கணக்கானோரை காணவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்

சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 820,000 பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2018 ஆண்டில் மட்டும் 40,000 பேருக்கு எய்ட்ஸ் நோய் வந்தது தெரியவந்துள்ளது. முன்பெல்லாம் ரத்த பரிமாற்றத்தின் காரணமாக எய்ட்ஸ் சீனாவில் பரவி வந்தது. ஆனால், சுகாதாரத் துறையின் வளர்ச்சியின் காரணமாக இப்போது அவ்வாறாக எய்ட்ஸ் பரவுவது இல்லை. ஆனால், இப்போது உடலுறவின் காரணமாக எய்ட்ஸ் பரவுவது அதிகரித்துள்ளது.

வாய்ப்பேயில்லை

அமெரிக்கா வட கொரியா மீது தொடர்ந்து தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு "வாய்ப்பேயில்லை" என்று அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரியா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகள் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ரி யோங்-ஹோ கூறினார்.

தங்கள் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் விலக்கப்பட வேண்டுமென்று வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வட கொரியாவின் கருத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :