You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிமன்றம், போலீஸ் மீது வசை: எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு
முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மெய்யபுரம் ஊருக்குள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல பொதுமக்கள் முயன்றபோது விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்லக்கூடாது என போலீசார் இரும்பு தடுப்புகள் போட்டு தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாரை கண்டித்து சாலை மறியல் நடந்தது. இதையடுத்து எச்.ராஜாவுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எச்.ராஜா போலீசார் மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக காட்டும் காணொளி வெளியானது. இந்த நிலையில் போலீஸ், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக எச்.ராஜா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 18 பேர் மீது திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் தடையை மீறி செயல்பட்டது, பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டியது, அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, நீதிமன்றத்தை அவதூறாக பேசியது, மிரட்டுவது, பிற மதத்தினரை புண்படும் வகையில் பேசியது உள்பட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஜேஎன்யூ பல்கலைக்கழகமாணவர் சங்க தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி
டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஒருங்கிணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள் வலதுசாரி மாணவர் அமைப்பான ஏபிவிபியை வீழ்த்தி நான்கு பதவிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர் மற்றும் துணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடந்தது.
அதில் இடதுசாரி மாணவர் இயக்கங்களான அனைத்திந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் சங்கம் போன்ற இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்டன.
இதில், மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பதவிகளிலுமே இடதுசாரி மாணவர் சங்கங்கள் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி இந்து (தமிழ்) - சிறைகளில் அதிரடி சோதனை
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தியுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த 3-ம் தேதி ஆய்வு நடத்தப்பட்டபோது, கைதிகள் அறைகளில் செல்போன்கள், எப்எம் ரேடியோக்கள், கஞ்சா பொட்டலங்களும், உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் அறைகளில் கலர் டிவிக்கள், வீட்டு சாப்பாடு சாப்பிடுவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது, பல வண்ணங்களில் ஸ்டைலாக ஆடை அணிந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து புகைப்படத்தில் இருந்த 5 கைதிகளையும் வேறு சிறைகளுக்கு மாற்றி சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செல்போனுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமாக சிக்கும் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் போன்றவை சிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி - சந்திரயான்-2ஜனவரியில் விண்ணில் ஏவப்படும்
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு செயற்கைகோள்களை சுமந்துகொண்டு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி - சி42 ராக்கெட் சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியாவின் முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-2 செயற்கோளை வரும் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 8 ராக்கெட்டுகளையும், 10 செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்