You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தந்தை பெரியாரின் பார்வையில் காதல் முதல் கௌரவம் வரை
இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாள். 1879ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 அன்று பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.ராமசாமி பிறந்து 140ஆம் ஆண்டு தொடங்குகிறது.
சமூக சீர்திருத்தவாதியாக அறியப்பட்ட பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் சாதி, மதம், கடவுள், பெண்ணுரிமை, மொழி உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விரிவாக பேசியும் எழுதியும் உள்ளார்.
அவை குறித்து பெரியார் பேசிய, எழுதிய கருத்துகளில் மக்கள் மத்தியில் மேற்கோள்களாக பரவலாகப் பகிரப்படும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.
பெண் கல்வி: பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்.
அரசியல்: அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதைப் பற்றியதல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரியான ஆட்சிமுறை இருக்க வேண்டும் என்பதைப் பற்றியதே ஆகும்.
நாகரிகம்: ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரிகம். அதற்கேற்ற வகையில் நமது உழைப்பு பயன்பட வேண்டும்.
இன்பம்: சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும்.
கௌரவம்: பொதுக் காரியத்தில் ஈடுபடுகிறவர் எவராவது தனது கௌரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால் அவர் தன் சொந்த கௌரவத்திற்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரேயாவார்.
முதலாளித்துவம்: பாட்டாளிகளின் கவலையும் தொல்லையும் தொலைய வேண்டுமானால் முதலாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்து தீர வேண்டும்.
சாதி ஒழிப்பு: சாதி பேதங்களை ஒழித்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கிற சமதர்ம முயற்சியை முதலில் செய்ய வேண்டும். சாதி, பேதம், ஒழிந்தால்தான், சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும்.
திருமணம்: திருமணம் என்பது வயது வந்த, அறிவு வந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும் வேறு எந்த கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல.
காதல்: ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.
கருத்து சுதந்திரம்: என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
லட்சியம்: உருவில் மனிதனாகவும் செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனித தன்மையுடைய மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்