You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காட்டுப்புலியைக் கடிக்கும் நாய்கள்' - யாரை சொல்கிறார் மோகன் பகவத்?
- எழுதியவர், ராஜேஷ் பிரியதர்ஷி
- பதவி, டிஜிட்டல் ஆசிரியர், பிபிசி இந்தி
சிகாகோவில் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று, உலக சமயங்களின் நாடாளுமன்றத்தில் விவேகானந்தர் பேசியதன் நினைவாக, அதே சிகாகோவில் செப்டம்பர் 8 அன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
வார இறுதி நாள் இல்லை என்பதால் செப்டம்பர் 11க்கு பதில் 8 அன்று அந்தக் கூட்டம் நடந்தது. இந்தியர்கள் வேலை செய்யும் நோக்கத்துடன்தான் பெரும்பாலும் அமெரிக்கா செல்கின்றனர். அவர்கள் யாரும் வேலையை விட்டுவிட்டு உரையைக் கேட்க வரப்போவதில்லை.
விவேகானந்தர் பேசிய உலக மதங்களின் மாநாடு எனும் நிகழ்வு. மோகன் பகவத் பேசியது உலக இந்து மத மாநாடு எனும் நிகழ்வு.
அவர் 41 நிமிடங்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை கவனித்தால், அவர் விவேகானந்தரிடம் இருந்து உந்துதல் எதையும் பெறவில்லை என்பதை அறிய முடியும்.
அவரது உரையின்போது பின்னணியில் காவிக்கொடியோ, இந்தியக் கொடியோ இல்லை. அமெரிக்கக் கொடிதான் பறந்தது. அவர் ஒரு முக்கியமற்றவர் இல்லை. இந்திய அரசின் 'பிராகிரஸ் ரிப்போர்ட்டை' வழங்கும் உலகின் மிகப்பெரிய 'அரசு சாரா தொண்டு நிறுவனத்தின்' தலைவர். ஏனெனில், ஆர்.எஸ்.எஸ் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பு.
'எங்கு தவறு நடந்தது?'
உலகம் முழுமைக்குமான அறிவு இந்தியாவில் இருந்தது என்று தனது உரையில் மோகன் பகவத் கூறினார். இது சாமானிய மக்களுக்கே தெரியும். பின்னர் ஒரு கேள்வியை அவர் எழுப்பினார். 'எங்கு தவறு நடந்தது? ஆயிரம் ஆண்டுகளாக ஏன் நமக்கு பிரச்சனை?'
இந்தக் கேள்விக்கு அவரே பதிலளித்தார். 'நாம் ஆன்மிக ஞானத்தின்படி வாழத் தவறிவிட்டோம்,' என்றார்.
ஆயிரம் ஆண்டுகள் என்று அவர் கூறுவதால், ஆங்கிலேயர் ஆட்சியை மட்டுமல்ல, இஸ்லாமியர்களான முகலாயர்கள் ஆட்சிக்காலத்தையும் அவர் சேர்த்துள்ளார்.
உண்மையாகச் சொல்லப்போனால், கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே ஆங்கிலேயே ஆட்சியை விமர்சித்ததில்லை. முகலாயர்களை விமர்சிக்கத்தான் அவர்களுக்குப் பிடிக்கும்.
இன்றைய சர்வதேச சமூகத்தில் தலைசிறந்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களே என்றார் பகவத். யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரைவிட இந்துக்கள் சிறந்தவர்கள் என்று அவர் எப்படி முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை.
இது இந்து எனும் பெருமை உணர்வைத் தூண்டத்தான். இந்துக்கள் ஒற்றுமையாகச் செயல்படாததுதான் பெரிய பிரச்சனை என்று அவர் உடனடியாகக் கூறினார். ஒற்றுமையாக இருக்க அழைப்பு விடுத்தால், 'சிங்கங்கள் கூட்டத்துடன் செல்வதில்லை' எனும் சொலவடையை இந்துக்கள் கூறுவதாக அவர் பேசினார்.
"காட்டின் அரசனான வங்கப் புலியும் தனியாக இருந்தால், காட்டு நாய்கள் அதை வேட்டையாடிக் கொல்லும்," என்று அவர் கூறியபோது கர ஒலி எழுந்தது. அவர் காட்டு நாய்கள் என்று யாரைச் சொன்னார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. எந்த நாயின் குட்டிகள் காரின் சக்கரத்தில் வந்து விழுந்தால் பிரதமர் நரேந்திர மோதிக்கு உள்ளம் வலிக்குமோ, அதே நாய்கள்தான் இவை.
"நான் இந்துக்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்," "இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்," "இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறியதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே கூறும் வசனங்கள்தான்.
எதற்காக இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், யாருக்கு எதிராக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், போன்ற கேள்விகளுக்கான பதில்கள் சைகைகள் மூலமே சொல்லப்படும். தேர்தல் போன்ற அசாதாரண சூழல்களின்போதுதான் சுடுகாடு - இடுகாடு பற்றிய பேச்சு வரும்.
நீங்கள்தான் ஆட்சியில் உள்ளீர்கள். நீங்கள்தான் சிங்கமாக உள்ளீர்கள். காவல்துறை, நிர்வாகம் அனைத்தும் உங்களுடையது. பயமும் உங்களுடையது. ஆமிர்கானின் மனைவி கிரண் ராவ் பயப்பட்டால், அது தவறு. நீங்கள் பயந்தால் அது சரி. உங்கள் பயம் வியப்பாக உள்ளது.
இந்து சாம்ராஜ்யத்தின் எல்லை
இந்துக்கள் உலகை சிறப்பானதாக்க முயல்வதாக மோகன் பகவத் கூறினார். "நமது நோக்கம் யாரையும் அடக்கி ஆள்வதல்ல. வரலாற்றில் நமக்கு மிகுந்த தாக்கமுண்டு. மெக்சிகோ முதல் சைபீரியா வரை இந்து சாம்ராஜ்யம் இருந்தது. இன்றும் அதன் தாக்கங்களை நாம் பார்க்க முடியும். அவற்றை இன்னும் மக்கள் பாதுகாத்து பின்பற்றுவதை பார்க்க முடியும்."
வெளிப்படையாக பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், மாயன், இன்கா, கிரேக்கர்கள், எகிப்தியர்கள் போன்ற இயற்கையை வணங்கியவர்கள் மற்றும் உருவ வழிபாடு மேற்கொண்டவர்கள் அனைவரும் இந்துக்களே.
அவர்களையும் இந்துக்கள் என்பதன்மூலம் இந்து என்பதால் பெருமை கொள்ளும் உணர்வைத் தூண்ட முயல்கிறார்.
''நவீன இந்துக்களின் நிலை மஹாபாரதத்தில் பாண்டவர்களின் நிலைமையைப் போல,'' என்று தன் உரையின்போது கூறினார். இந்த சிறு வாசகத்திலேயே இந்துக்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளுக்கு போராட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் பகவத். அனுமன் உறுதியுடன் கடல் கடந்து சென்றதையும் அவர் குறிப்பிட்டார்.
"பூச்சிக்கொல்லிகள் உலகம் முழுதும் உள்ளன. ஆனால் இந்து சமுதாயம் பூச்சிகள் உயிர் வாழ்வதற்கான உரிமையை மதிக்கிறது," என்று அவர் பேசினார். பூச்சிகள் என்று அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பதை மக்களின் கற்பனைக்கே விட்டுவிட்டார்.
நாம் யாரையும் எதிர்க்கவில்லை. ஆனால் நம்மை எதிர்ப்பவர்கள் இருக்கின்றனர். அதற்காக நம்மைப் பாதுகாக்க தேவையான கருவிகள் வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் அவர்கள் யார் என்பதையும் யூகத்துக்கே விட்டுவிட்டார்.
இலக்கு, திசை மற்றும் செயல்பாடு
தன் உரையின்போது ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு இயங்குகிறது என்றும் பகவத் கூறினார். 'ஒன்றாக இணைந்து தனித்தனியாக செயல்படுங்கள்' என்று அவர் பேசினார். அதாவது பிறருடன் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், தனியாக இயங்க வேண்டும். இதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இயங்கும் முறையே.
அதாவது எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி தனித்தனியாக செயல்படுகின்றனர். சூழலுக்கு தகுந்தாற்போல் தங்கள் பாதையைத் தேர்வு செய்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் அவர்கள் செயல்களுக்கு பொறுப்பேற்பதில்லை.
உண்மையை மட்டுமே பேசியதால் தர்மராஜா என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டரை மகாபாரதத்தில் கிருஷ்ணர் தடுத்ததே இல்லை. 'ஆனால், கிருஷ்ணருக்காக யுதிஷ்டர் போர்க்களத்தில் உண்மை அல்லாத ஒன்றைப் பேசினார்.' அஸ்வத்தமர் கொல்லப்பட்டதாக பாதி உண்மையை கூறியதையே அவர் குறிப்பிடுகிறார்.
அதாவது தலைமை பொய் பேசினாலும், ஒரு இலக்கை அடைய பொய்யை பேசவும் வலியுறுத்தினால் அதில் தவறில்லை என்று சூசகமாக கூறுகிறார் பகவத். சரி! அந்த இலக்கு என்ன? இந்து தேசத்தை அமைப்பது.
தனது 41 நிமிட உரையில் விவேகானந்தர் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தினார்.
எது எப்படியோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தர், மகாத்மா காந்தி, பகத் சிங், சர்தார் படேல் போன்றோர் உண்மையில் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் அவர்களின் உண்மையான ஆளுமை குறித்தும் ஏதும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சொல்வதில் அவர்களுக்கு பெரிய ஆபத்து உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்