You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்க பெண்களுக்கு ஒரு ஆப் - மன அழுத்தம் போக்குமா?
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
நண்பர்கள் - நம் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. சொல்லப் போனால் சிலருக்கு குடும்பத்தை விட அதிக உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்களே.
நாம் தனிமையாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால் நாம் முதலில் தேடுவதும் நண்பர்களைதான். அவர்களுடன் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வந்தால் நாம் சற்று லேசாக உணர்வோம்.
யார் என்று தெரியாத ஒரு நண்பரை வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றுவீர்களா? அப்படி செய்தால் உங்கள் மனஅழுத்தம் குறையுமா? இது ஒரு விசித்திரமான கேள்விதான். ஆம். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தொழில்நுட்ப யுகத்தில் என்பதை மறந்து விடாதீர்கள். ஆண் நண்பர்களை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றால் நம்புவீர்களா?
ஆண் நண்பர்கள் வாடகைக்கு…
'Rent a boyfriend'- இது இந்தியாவிற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் மேற்கத்திய நாடுகள் பலவற்றில் இதெல்லாம் வந்து ஆண்டுகள் சில ஆகிவிட்டன.
ஒருவர் தனக்கு தேவையான துணை அல்லது காதலன்/காதலியை தேட, டின்டர் (Tinder) போன்ற ஆப்கள் ஏற்கனவே இந்தியாவில் பிரபலமான ஒன்றாகவே இருக்கின்றன. தற்போது அந்த வரிசையில் இதுவும் சேர்ந்துள்ளது.
எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காலத்தில் பாய் ஃப்ரண்ட், கேர்ல் ஃப்ரண்ட், காதலன், காதலி இந்த வார்த்தைகளை எல்லாம் பயந்து பயந்து உபயோகப்படுத்திய சமூகம்தான் நம் சமூகம். தற்போது இதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது, நாம் எப்படி அதற்கேற்ப மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரக்கூட பாதி பேருக்கு இங்கு நேரமில்லை.
சரி. அது என்ன Rent a Boy friend?
குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஆண் ஒருவரை நண்பராக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மும்பை மற்றும் புனே நகரங்களில் இது தொடங்கப்பட்டுள்ளது. ஆண் நண்பரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திரைப்படம், உணவகம் மற்ற வெளி இடங்களுக்கு செல்லலாம். ஆனால், வீடு/ஹோட்டல் போன்ற தனி இடங்களுக்கு செல்லக்கூடாது. உடலுறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. இதுவே இதன் விதிமுறை.
ஆண் மாடல்கள், பிரபலங்கள், சாதாரண நடுத்தர ஆண்கள் என மூன்று வகை ஆண்கள் இந்த இணையதளத்தில் உள்ளார்கள். இதில் பதிவு செய்யும் ஆண்கள், தங்களது ஆவணங்கள், மருத்துவ அறிக்கை, காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் போன்றவற்றினை சமர்பிக்க வேண்டும். முக்கியமாக பெண்களை மரியாதையாக நடத்த தெரிந்திருக்க வேண்டும்.
எதற்காக இதெல்லாம் என்பதையும் அந்த இணையதளம் விவரிக்கிறது. அதில் முக்கியமான ஒன்று பெண்கள் மனஅழுத்தத்தில் (depression) இருந்து வெளியேவர இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்பின் தெரியாத ஒரு ஆண் நண்பரை வாடகைக்கு எடுத்து அவருடன் சில மணி நேரங்கள் செலவிடுவதால் பெண்களின் மனஅழுத்தத்திற்கு தீர்வு கிடைத்து விடுமா?
'சமூக சிக்கல் அதிகரிக்கும்...'
"ஒருவரின் மன அழுத்தம் குறைய வேண்டுமென்றால், அவர்களது பிரச்சனையை செவி மடுத்து யாராவது கேட்க வேண்டும். அதுவும் பிரச்சனையை கூறும் நபரின் குணத்தை தீர்மானிக்காமல் கேட்டாலே போதுமானது" என்கிறார் மனநல ஆலோசகரான நப்பின்னை.
அந்த ஒரு நபர் ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறார் அவர்.
"மேலும் எதற்காக ஒரு ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்க வேண்டும்? அங்கு எப்படி நட்பு இருக்கும்? அதுவும் பணம் வழங்கி ஒரு நண்பரை வாடகைக்கு எடுத்துதான் என் பிரச்சனையை சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை" என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், இதற்குதான் மனநல ஆலோசர்கள் இருக்கிறார்கள். முதலில் அலோசகர்களிடம் செல்வது குறித்த மனத்தடை நம் சமூகத்தில் இருந்து விலக வேண்டும். மேலும், ஒரு ஆண் நண்பரை வாடகைக்கு எடுத்து வெளியே செல்வது என்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்க முடியும். இதனால் ஒரு பெண்ணின் மன அழுத்தம் குறைய வாய்ப்பில்லை.
இதுவே ஒரு மனநல ஆலோகரிடம் செல்லும்போது, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கைளை முறையாக வழிநடத்தி, மீண்டும் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பதற்கும் வழிகாட்டியாக இருப்பார்கள்.
ஒருவரை வாடகைக்கு எடுத்து தன் மன அழுத்தத்தை போக்க நினைப்பது என்பது நிச்சயம் ஒரு தீர்வாகாது. மாறாக நம் சமூக கலாசாரத்தை அது மேலும் சிக்கலில் கொண்டுபோய்விடும்.
ஒருவரை மறக்க இன்னொருவர்?
முன்னாள் காதலரை மறக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, இன்னொரு புது ஆண் நண்பர் வேண்டும் என்று பெண்கள் நினைத்தால் அது சரியானதல்ல. ஒருவரை மறக்க இன்னொருவரை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு ஆரோக்கியமான வழியாகவும் இருக்காது.
இதனால் மனஅழுத்தம் அதிகமானாலும், ஆலோசகரை சந்தித்து தீர்வு தேடுவதே சிறந்தது.
ஆண்கள்தான் தீர்வு என்று கிடையாது…
ஆண்களிடம் பிரச்சனையை பகிர்ந்து கொள்வதால், பெண்களின் மன அழுத்தம் குறையும் என்பது ஒரு கட்டுக்கதை. இது மேலும், பெண்களை வலுவிழந்தவர்களாகவே காட்டும்.
இவ்வாறு ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்து பழகுவது என்பது குடும்பச்சூலில் மேலும் சிக்கலை உருவாக்கி, மீண்டும் மனஅழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும் என்றும் நப்பின்னை கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்