You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய தூண்டிய மாற்றாந்தாய்
- எழுதியவர், ரியாஜ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர்
இந்திய அரசின் நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய மாற்றாந்தாய் ஒருவர் தூண்டிய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தை கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை முயற்சி செய்த குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவரின் இரண்டாவது மனைவியின் ஒன்பது வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ய, தனது 14 வயது மகனை தூண்டிவிட்டிருக்கிறார் ஒரு பெண் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தாய் உத்தரவிட்டதால் மகனும், வேறு மூவரும் சேர்ந்து ஒன்பது வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தபோது, அந்த மாற்றாந்தாயும் அதே இடத்தில் இருந்திருக்கிறார்.
ஞாயிறன்று அந்த சிறுமியின் சடலம் காட்டுப் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டது. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பின் சிறுமியின் முகத்தில் அமிலம் ஊற்றி சிதைக்கப்பட்டிருக்கிறது.
சடலம் கைப்பற்றப்பட்டபின் தீவிரமான விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பெண், அவரது மகன் மற்றும் அந்த சிறுவனின் நான்கு நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மாற்றாந்தாயின் கொடுமைக்கு காரணம் என்ன?
பாரமுல்லாவில் உரி பகுதியில் வசிக்கும் முஸ்தாக் அஹ்மத் உள்ளுரைச் சேர்ந்த ஃபஹ்மீதா என்ற பெண்ணை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்.
முஸ்தாக், 2008ஆம் ஆண்டு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குஷ்பூ என்ற பெண்ணை மணந்தார், குஷ்பூவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இரண்டாவது மனைவியுடனே அதிக நேரம் செலவழித்த கணவன் மீது ஃபஹ்மீதாவுக்கு கோபம் ஏற்பட்டிருக்கிறது. மகள் மீதும் அதிக பாசம் வைத்திருந்ததால், ஃபஹ்மீதாவுக்கும் கணவர் முஸ்தாக் அஹ்மதுக்கும் தினசரி வாக்குவாதம் நடக்கும்.
ஒரு கட்டத்தில் மனைவியின் கோபம் வெறுப்பாக மாற, கணவனை பழிவாங்க முடிவு செய்தார் ஃபஹ்மீதா. "சிறுமி ஐந்து நபர்களால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்டபோது, அந்த இடத்தில் ஃபஹ்மீதாவும் இருந்திருக்கிறார். சிறுமியை வன்புணர்வு செய்த பிறகு, அவர் முகத்தில் அமிலத்தை ஊற்றி சிதைத்த பிறகு உடலை காட்டுக்குள் வீசிவிட்டார்கள்" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
10 நாட்களாக சிறுமியை காணவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பிறகு, சிறுமியை கோடாரியால் வெட்டி கொன்றிருக்கிறார்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி இம்தியாஸ் ஹுசைன் கூறுகிறார்.
19 வயது இளைஞன் ஒருவர் கூர்மையான கத்தியால் சிறுமியின் கண்களை தோண்டி எடுத்த பிறகு, சடலத்தின் முகத்தில் அமிலம் ஊற்றியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
2012இல் டெல்லியில் நடைபெற்ற நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு கொடூர நிகழ்வுக்கு பிறகு, பாலியல் வன்கொடுமை விவகாரங்களை அரசு மிகவும் கடுமையாக அணுகுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்