You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''என்னை திமுகவில் சேர்க்க ஸ்டாலின் மறுக்கிறார்'' - மு. க. அழகிரி
தி.மு.கவில் தன்னைச் சேர்த்தால் மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத்தான் வேண்டியிருக்கும் என அவரது மூத்த சகோதரர் மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார்.
தன்னைத் தி.மு.கவில் மீண்டும் சேர்க்க வேண்டுமென தான் கோரிவருவதாகவும் ஆனால், அதற்கு மு.க. ஸ்டாலின் மறுத்துவருவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி தெரிவித்தார். தனக்கோ தன் மகன் துரை தயாநிதிக்கோ எந்தப் பதவியையும் தாங்கள் கேட்கவில்லையென்றும் அழகிரி கூறினார்.
தி.மு.கவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி 2014ஆம் ஆண்டின் துவக்கத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை.
மு. கருணாநிதி மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தவந்த அழகிரி, கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன்னுடன்தான் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்த ஆரம்பத்தார். ஆனால், கட்சித் தலைமையிலிருந்து எந்த சமிக்ஞையும் வராத நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதியன்று சென்னையில் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி நினைவஞ்சலி ஊர்வலம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்தார்.
இதற்குப் பிறகு மதுரை சத்யசாயி நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில நாட்களாக இந்த ஊர்வலம் தொடர்பாக ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் வரவில்லையென ஊடகங்களில் செய்திகள் வெளியானதால், நேற்று ஊடகங்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம் கட்சியில் சேர்க்கப்பட்டால் மு.க. ஸ்டாலினை தலைவராக ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சியில் சேர வேண்டுமென்றால் தலைவராக ஏற்றுத்தானே ஆகவேண்டும்" என்று பதிலளித்தார்.
இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலின் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்