You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு” - கவிதையாய் வாழ்க்கை வாழும் மக்கள்
"ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு உன் கைகோர்த்து என் தலைசாய்க்க அங்கு வேண்டுமடா என் கூடு"
இந்த வரிகளை அப்படியே உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள் நினைத்துப் பார்க்கும் போதே மனதில் மழை பெய்கிறது அல்லவா? நிஜத்தில் அப்படியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள்.
இப்பூவுலகில் அதிக உயரத்தில் இருக்கும் வசிப்பிடங்களில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று.
தரிசான மலைகள், பாம்புபோல ஊர்ந்து செல்லும் ஆறுகள், பாலை போல காட்சித் தரும் குளிர்ச்சியான நிலப்பரப்பு என வேறொரு உலகத்திற்கு சென்றது போல இருக்கிறது ஸ்பிட்டி வேலி.
தபால் நிலையம்
இப்படியான நிலப்பரப்பில் வசிக்கும் ஒருவரது ஆன்மா எவ்வளவு நெகிழ்வுடன் இருக்கும்? அந்த நெகிழ்ச்சி வார்த்தைகளாக உருப்பெற்றால்... அப்படியான வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்ட வார்த்தைகளை சுமந்து செல்ல அங்கு செயல்படுகிறது ஒரு தபால் நிலையம்.
கடல் மட்டத்திலிருந்து 4,440 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹிக்கிம் கிராமத்தில் இருக்கிறது அந்த தபால் நிலையம். அங்கு சிறு சிறு குழுக்களாக இருக்கும் கிராமத்தை இந்த உலகத்துடன் இணைப்பது அந்த தபால் நிலையம்தான்.
அந்த தபால் நிலையம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டிலிருந்து அங்கு போஸ்ட்மாஸ்டராக இருக்கிறார் ரின்சென் செரிங்.
அவர், "சாலைகள் மிகமோசமானதாக இருக்கும். வாகனங்கள் செல்ல முடியாது. கடிதங்களை சுமந்துக் கொண்டு நடந்து செல்ல வேண்டும். பனிப்பொழிவின் காரணமாக குளிர்காலங்களில் அடிக்கடி இந்த தபால் நிலையம் மூடப்படும்" என்கிறார்.
இங்கிருந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு தலைநகரான கஸாவுக்கு சென்று வர 46 கிலோ மீட்டர் பயணம். இரண்டு தபால் ஊழியர்கள் கடிதங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்கிறார்கள்.
ஐந்து கிராமம், ஒரு பள்ளி
ஹிக்கிம் தபால் நிலையத்தை சார்ந்து இருக்கும் நான்கு, ஐந்து கிராமங்களில் மக்கள் தொகை குறைவுதான். கைபேசி சேவை இருக்கிறதென்றாலும், எல்லா நேரத்திலும் அது செயல்படாது. இணைய வசதி இன்னும் சென்று சேரவில்லை.
இங்கு இருக்கும் கிராமங்களில் ஒன்று கோமிக். 4,587 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இண்ட கிராமம். இங்கு 13 வீடுகள் மட்டுமே உள்ளன. ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு ஐந்து மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். பழைய மடாலயம் ஒன்று உள்ளது, சிறு விவசாயபரப்பும் உள்ளது. அங்கு பார்லி மற்றும் பச்சை பட்டாணி விவசாயம் நடைபெறுகிறது.
கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆண்டுக்கு ஆறு மாதங்கள் ஸ்பிட்டி பள்ளதாக்குக்கும் வெளி உலகுக்குமான தொடர்பு துண்டிக்கப்படும்.
இங்குள்ள மக்கள் பெளத்தத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பழைய மடாலயம் இங்கு உள்ளது. சிலர் இதனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: