You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது
தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால், தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க, சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மற்றும் ஏற்கனவே முதல் பட்டியலில் மருத்துவ இடம் ஒதுக்கப்பட்ட 20 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாளில் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அருகிலுள்ள ஆங்கில கேள்விகளை பார்த்து தகுந்த விடையளிக்க வேண்டுமென்று ஏற்கனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் சிபிஎஸ்இ தரப்பில் வாதிடப்பட்டது.
"தமிழில் தேர்வெழுதிய 23,000 மாணவர்களும் மொழிபெயர்ப்பில் தவறு இல்லையென்றால், அந்த குறிப்பிட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியான விடையளித்து இருப்பார்களா என்பது நிச்சயமற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு தவறான கேள்விக்கும் தலா நான்கு மதிப்பெண்கள் என 196 மதிப்பெண்கள் வழங்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்கிறோம்" என்று கூறியதுடன் வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இதற்கென சிறப்பு குழுவை அமைத்து மொழிபெயர்ப்பை சரியாக மேற்கொள்ள சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகளில் மொழிமாற்ற பிழைகள் இருந்ததால் அதற்குரிய 196 மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை வழங்குவதோடு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்களின் புதிய தரவரிசை பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வை நடத்த பட்டியலை வழங்கிவிட்டது. அதன் அடிப்படையில் 3,500 நபர்களுக்கு மருத்துவ சீட் அளிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
'மருத்துவக் கனவைக் கைவிட்டேன்'
தமிழ் வழியில் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 23,000க்கும் மேலான மாணவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த பொருள்செல்வன்.
"சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தபோதே சி.பி.எஸ்.இ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, எப்படியும் மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பு மாற்றப்படும் என்று எதிர்பார்த்தேன்," என்று பிபிசி தமிழிடம் கூறினார் பொருள்செல்வன்.
மேல்முறையீடு முடிந்து உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வர எப்படியும் சில மாதங்கள் ஆகும், அதுவரை என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையை இழந்து என் மருத்துவக் கனவைக் கைவிட்டேன் என்று அம்மாணவர் தெரிவித்தார்.
பொருள்செல்வன் சமீபத்தில், சென்னை ஆவடியில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை அறிவியல் வகுப்பில் சேர்ந்து கணிதவியல் படித்து வருகிறார்.
'அரசியலமைப்புக்கு எதிரானது'
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொதுக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 246இன் கீழ் உள்ள மாநிலப் பட்டியலில், பல்கலைக்கழகங்களை நிறுவவும், ஒழுங்குமுறைப்படுத்தவும், மூடவும் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசால் தரத்தை நிர்ணயிக்க மட்டுமே முடியும். ஆனால், நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையில் உள்ளீடு செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது."
"பொதுப்பட்டியலிலும் மருத்துவக் கல்வி சேர்க்கப்பட்டுள்ள சரத்து 25இல், மத்தியப் பட்டியலின் சரத்து 63,64,65,66 ஆகியவற்றுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மத்தியப் பட்டியலின் சரத்து 66இல் உயர்கல்வி, ஆய்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் உரிமை மட்டுமே மத்திய அரசுக்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மாநிலப் பல்கலைக்கழகம். இதை இதுவரை யாரும் உச்ச நீதி மன்றத்தில் வாதிடவும் இல்லை, வாதிடும் வாய்ப்பு வழங்கப்படவும் இல்லை," என்று கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் மாடல் பல் மருத்துவக் கல்லூரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், "மாநில அரசுதான் மாநில பாடத்திட்டம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு இடையே ஒரு சம வாய்ப்புள்ள தளத்தை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது. இன்றைய தீர்ப்பு உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பு வழங்கிய தீர்ப்பை கருத்தில் கொள்ளாமலேயே வழங்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்