இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினரை ஒன்றிணைத்த மூதாட்டி

    • எழுதியவர், மான்சி தாஸ், பிபிசி
    • பதவி, மிர்ஜா ஒளரங்கசீப் ஜர்ரால், முசாஃபாபாத், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்து

ஜம்மு-காஷ்மீரின் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள காஷ்மீரில் வசிக்கின்றனர். அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க வேண்டுமானால் அது மற்றொரு நாட்டிற்குச் செல்வதற்கு ஒப்பானது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தற்போது பதட்டமாக இருப்பதால், அது இரு நாடுகளின் எல்லையிலும் பிரதிபலிக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் நாணயத்திற்கு மறுபக்கம் இருப்பது போல, இரு நாடுகளிடையேயான உறவிலும் மறுபக்கம் இருக்கிறது.

70 வயதான குல்சும் பீபீ பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜூன் 25ஆம் தேதியன்று இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசிக்கும் தனது சகோதரர் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வந்தார்.

வந்த இடத்தில், ஜூன் 30ஆம் தேதியன்று மாரடைப்பினால் குல்ஸம் பீபீ இறந்துவிட்டார். இறந்து போனவரின் சடலத்தை பாகிஸ்தானில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு எப்படி அனுப்பி வைப்பது என்ற நெருக்கடி குல்ஸம் பீபீயின் சகோதரர் குடும்பத்திற்கு ஏற்பட்டது.

உடனடியாக, மனிதாபிமான அடிப்படையில் இந்திய ராணுவமும், உள்ளூர் போலீசும் இணைந்து ஒரே நாளில் தேவையான ஆவணங்களை தயார் செய்து, ஞாயிற்று கிழமையன்று பாகிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் குல்சும் பீபீயின் சடலத்தை ஒப்படைத்து ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியது.

நிர்வாகத்தின் உதவியால் விரைவாக அனுப்பப்பட்டசடலம்

வழக்கமாக, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவையான ஆவணங்களை தயார் செய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான நாட்கள் ஆகலாம்.

இந்தியாவின் காஷ்மீரில் வசிக்கும் குல்சும் பீபீயின் சகோதரர் முகமது சாதிக் ஹுசைன் கானிடம் பேசினோம். "இங்கு பணியில் உள்ள காவல்துறை டி.ஜி எங்கள் கிராமத்தை சேர்ந்தவர். அவரிடம் எனது சகோதரியின் மரணம் பற்றிய தகவலை தெரிவித்தேன். ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடம் இந்தத் தகவலை தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அவர் எங்களுக்கு பல உதவிகள் செய்தார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சகோதரியின் சடலத்தை பாகிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் அனுப்பி வைக்க முடிந்தது."என்றார்.

அதே நேரத்தில், உடலை பெறுவதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது தங்களது நல்ல காலம் என்று ஆச்சரியப்படுகின்றனர் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீரில் வசிக்கும் குல்சம் பீபீயின் கணவர் மற்றும் குடும்பத்தினர்.

"இரு தரப்பினரும் துரிதமாக பணியாற்றினார்கள். இந்திய தரப்பு அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்தது எங்கள் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்" என்கிறர் குல்சும் பீபீயின் மகன் வாசித்.

இதற்கிடையில், குல்சும் பீபீயின் மகன் வாசித் ஒரு கடினமான சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறார்.

"இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இருந்து நேரடியாக எங்களுக்கு தகவல் வரவில்லை முதலில் செளதி அரேபியாவிற்கு தகவல் சொல்லப்பட்டு அங்கிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே நான் நேரடியாக தொடர்பு கொண்டபோது, அம்மா இறந்த தகவல் தெரியவந்தது. பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீரில் இருந்து நாங்கள் நேரடியாக இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீரில் உள்ளவர்களை தொலைபேசியில் அழைக்க முடியும், ஆனால், இந்தியாவில் உள்ளவர்களுக்கு அந்த வசதி இல்லை."

பாகிஸ்தான் மற்றும் இந்தியா என இரு தரப்பு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றியதால் சிக்கல் இல்லாமல் தனது தாயின் உடலை விரைவில் பெற முடிந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இரு தரப்பும் முனைப்புடன் செயல்பட்டன

இந்த வழக்கில் உள்ளூர் நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது என்று இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் பூஞ்ச் பகுதியை சேர்ந்த உள்ளூர் போலிஸ் அதிகாரி ரியாஸ் தந்த்ரே கூறுகிறார். "தேவையான அனைத்து ஆவணங்களையும் 10-11 மணிநேரத்தில் நாங்கள் செய்து முடித்தோம். இவ்வளவு விரைவில் நடைமுறைகள் முடிக்கப்படும் என்று நானே எதிர்பார்க்கவில்லை" என்று அவர் தெரிவிக்கிறார்.

"விசயத்தை கேள்விப்பட்டதும் உள்ளூர் நிர்வாகத்தினரும் ராணுவத்தினரும் இணைந்து துரித கதியில் செயல்பட்டனர். எதிர்தரப்பினரை தொடர்பு கொண்டு விசயத்தை விளக்கினார்கள். இந்திய தரப்பைப் போலவே, பாகிஸ்தான் தரப்பினரும் துரிதமாக செயல்பட்டனர். அவர்கள் தரப்பில் தேவையான நடைமுறைகள் முடிவடைந்துவிட்டதாக எங்களுக்கு மாலையில் தகவல் கிடைத்தது. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமையன்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது."

நடைமுறைகள் முடிப்பதற்கு கால தாமதமானால், சடலத்தை பிணவறையில் வைக்கவேண்டும், ஆனால், விஷயம் விரைவில் முடிவடைந்ததால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை, என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பாகிஸ்தானில் உள்ள பிபிசி ஊழியர் மிர்ஜா ஒளரங்கசீப் ஜர்ராலிடம் பேசினேன். "ராவ்லாகோட் பகுதியின் மாவட்ட ஆணையர் அன்சார் யாகூபிடம் பேசினேன். அவர் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் இந்திய ராணுவத்துடன் இதுதொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர்"

"எல்லா நடைமுறைகளும் முடிந்ததும், இந்திய ராணுவத்தின் முன்னிலையில் இந்திய அதிகாரிகள் குல்சும் பீபீயின் சடலத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நடைமுறைகளை முடிக்க குறைந்தது இரண்டு நாட்களாவது காலம் எடுக்கும். ஆனால் தற்போது குல்சும் விசயத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

இந்த முழு நிகழ்வில் வெளிவந்த விஷயம் என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இடையே அரசுமுறை உறவுகள் எப்படியிருந்தாலும், எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் அமைதியான வாழ்க்கையையே விரும்புகின்றனர்.

"இரு நாட்டு மக்களும் அமைதியை விரும்புகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும், சமாதானம் ஏற்படவேண்டும். அப்போதுதான் இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழமுடியும்" என்கிறார் குல்சும் பீபீயின் சகோதரர் முகமது சாதிக் ஹுசைன் கான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :