You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செய்தித்தாள்களில் இன்று: 8,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்கள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து (ஆங்கிலம்)
விடைத்தாள்கள் தொலைந்ததின் காரணமாக பீகாரில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தொலைந்த 42,500 விடைத்தாள்கள் 8,500 ரூபாய்க்கு காயலாங்கடைக்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.
கோபால்குஞ்ச் பகுதியிலுள்ள ஒரு அரசாங்க மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களை விற்றதாக அந்த பள்ளியின் உதவியாளர் ஒருவரும், அதை வாங்கியதாக காயலாங்கடை முகவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி இந்து (தமிழ்)
ரயில்களின் படிகளில் நின்றுகொண்டும், தண்டவாளம் அருகில் நின்றுகொண்டும், ரயில்களில் செல்லும்போதும் செல்பி எடுப்பதால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு விதிகளை மீறி இதுபோன்று செல்பி எடுப்பவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பதற்கு ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய உத்தரவு அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி
உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை விமான நிலையம் அமைக்கப்படாத ஓசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் உடனடியாக விமான நிலையம் அமைக்கக்கோரி மத்திய வர்த்தகம்-தொழில் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தொழில் நகரமாக வளர்ந்து வரும் ஓசூர், தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்துக்கு அருகில் அமைந்துள்ளள ராமநாதபுரம் மற்றும் நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் சேவையை தொடங்க வேண்டுமென்று முதல்வர் அக்கடிதத்தில் கூறியுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஸ்வச் சர்வேக்சான் திட்டத்தின் கீழ் நாட்டில் சிறப்பிடம் பெற்றுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கில) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு 13வது இடத்தையும், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகியவை முறையே 13, 16 மற்றும் 51வது பிடித்துள்ளதாகவும், குறிப்பாக சென்ற ஆண்டு இப்பட்டியலில் 235வது இடம் வகித்த சென்னை தற்போது முதல்முறையாக 100வது இடத்தை பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்