You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாரா சாண்டர்ஸ்
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பணியாற்றுவதற்காக, வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் செயலாளர் சாரா சாண்டர்ஸ், அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தி ரெட் ஹென் லெக்ஸ் எனும் உணவகத்தின் இணை உரிமையாளர் ஒருவர், சாரா சாண்டர்ஸை அவரது குடும்பத்தினருடன் உணவகத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
"மனிதாபிமானமற்ற மற்றும் நியாயமற்ற" நிர்வாகத்தில் சாரா சாண்டர்ஸ் பணியாற்றுகிறார் என தான் நம்புவதாக அந்த உணவகத்தின் இணை உரிமையாளரான ஸ்டீபன் வில்கின்சன் எனும் பெண் கூறியுள்ளார்.
என்னைப் படுகொலை செய்ய முயற்சி- ஜிம்பாப்வே அதிபர் முனங்காக்வா
ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் முனங்காக்வா, புலவாயோ நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு ஒன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார். இதனை படுகொலை முயற்சி என கூறியுள்ள முனங்காக்வா, ஆளும் ஜானு-பிஃப் கட்சியில் தனக்கு எதிராக உள்ளவர்கள் இந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் உட்பட பத்து பேர் இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்துள்ளனர். இதனை கோழைத்தனமான செயல் எனக்கூறியுள்ள முனங்காக்வா, இத்தாக்குதல் அடுத்த மாதம் நடக்க உள்ள தேர்தலை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
சிரியா: 45 ஐ.எஸ் தீவிரவாதிகளைக் கொன்ற இராக்
கிழக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில், 45 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றதாகவும், அதில் சிலர் முக்கிய தலைவர்கள் என்றும் இராக் கூறியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடுவதற்காக, சிரியா அரசுக்கு இராக் ராணுவம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இன்று துருக்கியில் தேர்தல்
துருக்கியின் அடுத்த நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்ந்தேடுக்கும் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இத்தேர்தல், தற்போதைய அதிபர் ரெசெப் தாயிப் எர்துவானின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளதால், உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
எர்டோகன் ஏற்கனவே 15 ஆண்டுகள் பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் துருக்கியில் ஆட்சி புரிந்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்