You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: இந்திய நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியம் கலப்பு என ஆய்வில் தகவல்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: இந்திய நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு
இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்ட அளவை காட்டிலும் அதிமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டியூக் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள தகவல்களில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால், அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் நாள் பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், யுரேனிய கலப்பை தடுக்க இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆய்வறிக்கை கூறுவதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
தினத்தந்தி: மோடியின் செல்வாக்கு சரியும்போது கொலை சதியென செய்தி பரப்பப்படும்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, பிரதமர் மோதியையும் கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டியதாக மகாராஷ்டிராவின் பூனே போலீஸார் நீதிமன்றத்தில் ஒரு கடிதத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ''இது முற்றிலும் உண்மையற்றது என்று நான் கூறவரவில்லை. எப்போது எல்லாம் மோதியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோதியின் பழைய தந்திரம், அவர் முதல்வாராக இருந்தபோதில் இருந்து இதனை தொடர்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்க வேண்டும், எவ்வளவு உண்மை உள்ளது என்பதை தெரிய விசாரிக்க வேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறியுள்ளார் என தினத்தந்தி செய்தி கூறுகிறது.
தினமலர்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாதிப்பு: அமைச்சர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ட்ரான்ஸ்பார்மர் எனப்படும் மின் மாற்றிகள் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மின் மாற்றிகளுக்கு தேவையான தாமிரத்தில் 70 சதவீதத்தை ஸ்டெர்லைட் ஆலை வழங்கி வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால், வெளி மாநிலங்களில் இருந்து தாமிரம் வாங்க வேண்டி உள்ளது என மின் துறை அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தெரிவித்துள்ளார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்