BBC Top 5 News: ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவலுக்கு ஆபத்து?

தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு.

ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவலுக்கு சிக்கல்?

மென்பொருளில் ஏற்பட்ட 'பக்' என்னும் தொழில்நுட்ப குறைபாட்டின் காரணமாக 14 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களது தனியுரிமை சார்ந்த தகவல்களை தெரியாமலேயே பொதுவெளியில் பகிர்ந்திருப்பார்கள் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதாவது, ஃபேஸ்புக் பயனர் ஒருவர் தனது கணக்கில் பதிவிடப்படும் பதிவுகளை 'தனிப்பட்ட' பதிவாக வெளியிடுவதற்கு முன்னரே தேர்ந்தெடுத்திருந்தாலும், அது தற்போது பொதுவெளியில் பகிரப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

பலனளிக்குமா ராஜ்நாத் சிங்கின் காஷ்மீர் பயணம்

காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அசாதாரணமான சூழல் நிலவி வரும் நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இரண்டு நாள் காஷ்மீர் சுற்றுப்பயணம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிவினைவாதிகள் காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பெண்கள் இல்லை

2018ஆம் ஆண்டுக்கான அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக பெண்கள் யாரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஆள் கடத்தல் தொடர்பாக 6 பேருக்கு ஐ.நா. அமைப்பு தடை

லிபியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஆறு பேருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

சர்வதேச தடை பட்டியலில் ஆள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபர்களை சேர்ப்பது இதுவே முதல்முறையாகும்.

லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பல ஆயிரம் பேரை கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணியா?

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் நாடுமுழுவதும் கூட்டணி அமைத்து வரும் நிலையில், தேசிய தலைநகரான டெல்லியில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைக்குமா என்ற நீண்டநாள் கேள்விக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், தற்போதைக்கு அதற்கான வாய்ப்பில்லை என்றும், ஆனால் அரசியலில் நிரந்திரமானது என்று எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.