You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
சந்தேகத்திற்குரிய ஒரு மரணமோ, கொலையோ நடந்திருந்தால் அதுகுறித்த விசாரணையில் உடல் கூராய்வு அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும்.
ஸ்டர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை உயரும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போலீஸார் நிகழ்த்தியது திட்டமிட்ட படுகொலை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
மக்கள் போராட்டத்தை எதிர்கொள்வதற்கு என்று சில வழிகாட்டுதல்கள் உள்ளன. முதலில் கண்ணீர் புகை குண்டு வீச வேண்டும், பின் தடியடி, இறுதியாகதான் துப்பாக்கியை பிரயோகிக்க வேண்டும். அதுவும் முட்டிக்குகீழ்தான் சுட வேண்டும். துப்பாக்கி சூடு நடக்க இருக்கிறது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்க வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அப்படியான எந்த வழிக்காட்டுதல்களையும் பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்று குற்றஞ்சாட்டும் அப்பகுதி மக்கள் இப்போது தங்களுக்கு எதிரான தடயங்களை மறைப்பதற்காகவும் போலீஸார் முயற்சிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் உடல் கூராய்வு அறிக்கை இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முதல் உடல் கூராய்வு
முதன் முறையாக உடல் கூராய்வு 1302 ஆம் ஆண்டு, வடக்கு இத்தாலி பகுதியான பொலாக்னாவில் தான் செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய முறையில் இறந்தவர்களின் உடலை மருத்துவர் பார்டோலிமியா உடல் கூராய்வு செய்து, இறப்பிற்கான காரணத்தை கண்டறிய முயன்றார்.
அதிக நாட்கள்
எஸ்.ஆர். எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தடவியல் மருத்துவ துறையின் தலைமை பேராசிரியர் மருத்துவர் கே. தங்கராஜிடம் பேசினோம்.
"உடல் கூராய்வு என்பது பொதுவான ஒன்று என்றாலும், துப்பாக்கிச் சூட்டினால் மரணித்தவர்களை உடல் கூராய்வை அனவராலும் மேற்கொண்டுவிட முடியாது" என்கிறார் மருத்துவர் தங்கராஜ் .
"துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட மரணத்தை ஆராய தடயவியல் அறிவியலில் பாலிஸ்டிக்ஸ் என்ற தனி துறையே (Firearms Examination and Ballistics Unit )இருக்கிறது . துப்பாக்கி ரவையால் மரணித்தவரின் உடலில் குறிப்பாக இரண்டு காயங்கள் இருக்கும். துப்பாக்கி குண்டு உட்புகுந்த உடலின் பாகம். பின் அந்த குண்டு வெளியே சென்ற உடலின் பாகம். இதனை entry/exit பாயிண்ட் என்பார்கள். இதனை முறையாக கூராய்வு செய்து, தடயங்களை பூனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் காரணமாக துப்பாக்கி குண்டு மரணங்களில் உடல் கூராய்வு அறிக்கை வர அதிக நாட்கள் பிடிக்கும்" என்கிறார்.
மேலும் அவர், "துப்பாக்கிதாரி அருகிலிருந்து சுட்டு இருந்தால், உடலில் துப்பாக்கி ரவை, துப்பாக்கி புகை மற்றும் துகள் இருக்கும். கொஞ்ச தூரத்திலிருந்து சுட்டு இருந்தால் துப்பாக்கி புகை மட்டும் இருக்கும். தொலைவிருந்து சுட்டு இருந்தால் துப்பாக்கி குண்டு மட்டும் இருக்கும்" என்கிறார்.
தடயங்களை மறைக்க முடியும்
துப்பாக்கி ரவையால் மரணித்தவர்களை உடல் கூராய்வு செய்யும் போது தடயங்களை மறைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற நம் கேள்விக்கு, "தடயங்களை மறைக்க முடியும்." என்ற அவர், சில சிக்கலான வழக்குகளில் அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.
"துப்பாக்கி காயங்களை, ஈட்டி காயங்கள் என்று மாற்றி அறிக்கை தர முடியும்" என்கிறார்.
துப்பாக்கி குண்டுகளில் entry/ exit பாயிண்ட் இருக்கிறது என்று சொன்னேன் தானே? அந்த காயங்களை ஈட்டி உள் நுழைந்ததால்/குத்தியதால் ஏற்பட்ட காயம் என்று அறிக்கையை மாற்றி தர முடியும் என்கிறார் மருத்துவர் தங்கராஜ் .
பாதிக்கப்பட்டவர்களின் உரிமை
பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பல உரிமைகள் உள்ளன என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜெ. அமலோற்பவநாதன்.
அவர், "உடல் கூராய்வில் ஏதேனும் முறைகேடு செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட தரப்பு உடல் கூராய்வை கண்காணிக்க தாங்கள் விருப்பப்பட்ட மருத்துவரை நியமித்துக் கொள்ள முடியும். அதுபோல, ஒட்டு மொத்த கூராய்வையும் வீடியோ எடுக்கலாம்." என்கிறார்.
மனித உரிமை மீறல்
"போலீஸ் துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, துப்பக்கி குண்டுகள் எங்கே பாய்ந்துள்ளன என்பதை பார்க்க வேண்டும். தலை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்திருந்தால், அது மனித உரிமை மீறல்தான்" என்கிறார் அமலோற்பவநாதன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்