You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவமனையில் போராட்டம், தடியடி: தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாயன்று (மே23) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் மட்டுமே இறந்தவர்களின் உடல்களை வாங்குவோம் என்று கூறும் இவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சந்திக்கவரும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளையும் எதிர்த்து கோஷமிட்டு வருகின்றனர்.
அங்கு உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் சிலர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து, மீண்டும் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதற்கிடையே அந்தப் பகுதியில் இருந்து இரண்டு முறை வெடிச் சத்தம் கேட்டது. அது என்னவிதமான வெடிச்சத்தம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
போராட்ட மனநிலையில் இருந்து இன்னும் தூத்துக்குடி நகரம் மீளவில்லை. தூத்துக்குடி நகரப்பகுதியில் கடைகள் மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்து பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கலவரம் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை சாலை ஆகிய இடங்களில் எரிக்கப்பட்ட வாகனங்கள் நடந்த போராட்டத்திற்கு சாட்சியாக அங்கே கிடக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுகுக் கண்டனம் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் ஒரு பிரிவினரும், இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினரும், அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசாருக்கு எதிராகப் பேசியவண்ணம் உள்ளனர். ஊடகத்தினருக்கு எதிரான கருத்துகளும் பகிரப்படுகின்றன.
நகரத்தில் சிறிய அளவில் போராட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று கூட்டங்களை கலைப்பதற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது காவல்துறை வாகனங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் போராட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளதாகவும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்