கர்நாடகா தேர்தல்: எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடையில்லை - உச்சநீதிமன்றம்

கர்நாடக மாநில முதல்வராக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே இன்று (வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு முதலமைச்சராக அவர் பதவி ஏற்கிறார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நள்ளிரவு 1:45 மணியளவில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷன் மற்றும் அர்விந்த் பாப்டே ஆகியோர் விசாரித்தனர்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும், பா.ஜ.க சார்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியும் வாதிட்டனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா ஏழு நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சிங்வி சுட்டிக்காட்டியுள்ளார்.

நள்ளிரவில் நீண்ட நேரம் நடைபெற்ற வாதங்களையடுத்து, எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடையில்லை என்று கூறிய நீதிபதிகள், மே 15, 16 ஆகிய தேதிகளில் 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என்று கர்நாடக ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 112 ஆகும்.

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 104 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன.

ஒரு தொகுதியில் சுயேட்சையும், கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்தார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா.

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: