You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா: அவுரங்காபாத்தில் வெடித்த வன்முறையில் இருவர் உயிரிழப்பு
- எழுதியவர், நிரஞ்சன் சன்வால் மற்றும் அமேயா பதக்
- பதவி, பிபிசி
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் வெள்ளிக்கிழமையன்று இருதரப்பினருக்கிடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டதை அடுத்து அங்கு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறை மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், போலீசார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவுரங்காபாத்தின் காவல் ஆணையர் மிலிந்த் பாரம்பா தெரிவித்துள்ளார்.
தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதே வெள்ளைக்கிழமை இரவு 10:30க்கு உண்டான இந்த மோதலுக்கு காரணமென்று முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினருக்குமிடையே நடந்த கைகலப்பு பிறகு வன்முறை மோதலாக உருவெடுத்தது.
"தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லத்திகளையும், பிளாஸ்டிக் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்" என்று பாரம்பா கூறினார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4:30 மணியளவில் நகரத்தின் காந்திநகர், மோதி கரஞ்சா, ஷா கஞ்ச் மற்றும் ராஜா பஜார் ஆகிய பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடந்த சண்டையின்போது இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும், கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், மோதலில் ஈடுபட்ட இருவேறு தரப்பினர் இரண்டு ரயில்களுக்கு தீ வைத்தனர்.
இந்த மோதலின்போது தீ வைக்கப்பட்டதில் ஷா கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள கடைகள் சாம்பலாகிவிட்டதாகவும், ஆனால் தற்போது நகர் முழுவதும் சூழ்நிலை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவிக்கிறார்.
"போலீசார் தங்களது வேலையை செய்து வருகின்றனர். தற்போது நகர் முழுவதும் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தடையை மீறி தெருக்களில் கூடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்