You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி: ஆளுநர் கிரண் பேடி உரையை மொழி பெயர்த்த முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் விழா ஒன்றில் கலந்துகொண்ட துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தன்னுடைய ஆங்கிலப் பேச்சை முதலமைச்சர் நாராயணசாமி மொழி பெயர்க்க வேண்டுமெனக் கூறினார். சில சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் வழக்கமாக மூன்று நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்த விழாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் நாராயணசாமியும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் ஒன்றாக ஒரே நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேச ஆரம்பித்த கிரண் பேடி, தன்னுடைய ஆங்கிலப் பேச்சை முதல்வர் நாராயணசாமிதான் மொழிபெயர்க்க வேண்டுமெனக் கூறினார். சற்று அதிர்ந்த முதல்வர் நாராயணசாமி முதலில் தயங்கினார். பிறகு, எல்லோரும் கேட்டுக்கொள்வதால் ஆளுநரின் பேச்சை மொழிபெயர்ப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய கிரண்பேடி, தான் பேசுவதை மட்டும் 10 நிமிடங்கள் முதல்வர் மொழிபெயர்க்க வேண்டுமெனக் கூறினார்.
முதலமைச்சர் நாராயணசாமியை இப்படி ஆளுநர் மொழிபெயர்க்க வலியுறுத்தியதை எதிர்த்து, அங்கிருந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வெளியேறினார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, "இன்றைக்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. கிரண்பேடி தனது பேச்சைத் துவங்கும்போது எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். பெரும்பாலானவர்கள் தெரியுமென்று பதிலளித்தனர்.
இருந்தபோதும் அவரது பேச்சை நியமன எம்எல்ஏக்களில் ஒருவரான செல்வகணபதி மொழிபெயர்க்க ஆரம்பித்தார். சில நிமிடங்கள் கழித்து கல்வி அமைச்சரை அழைத்தார் ஆளுநர். ஆனால், அவர் தன்னால் அவ்வளவு திறமையாக மொழிபெயர்க்க முடியாது என்று கூறியவுடன் முதல்வரை அழைக்கிறார் துணை நிலை ஆளுநர். இது முதல்வரை அவமானப்படுத்தும் செயல்" என்றார்.
"ஆளுநர் தன் பேச்சை யாராவது மொழிபெயர்க்க வேண்டுமென கருதியிருந்தால் அவருடைய செயலரையே மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே முதல்வரை மொழிபெயர்க்கச் சொல்லியதன் மூலம் தனக்குக் கீழ்தான் அனைவரும் என்று நிரூபிக்க விரும்புகிறார். இது சரியல்ல," என்றார் அன்பழகன்.
இது குறித்து முதலமைச்சர் நாராயணசாமியைத் தொடர்பு கொண்டபோது சிறிது நேரத்தில் பேசுவதாகச் சொன்னவரை அதன் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்