மகாராஷ்டிரா: மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஹிமான்ஷு ராய் தற்கொலை செய்துக்கொண்டார். மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் ஹிமான்ஷு ராய், 1988ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பணிக்கு தேர்வானவர். அவர் புற்றுநோய்க்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2016ஆம் ஆண்டு முதல் அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கடைசியாக, மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் வீட்டுவசதிப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்துவந்த இவர், மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புக் குழு (ஏ.டி.எஸ்) தலைவர், ஐ.பி.எல் சூதாட்ட ஊழல் போன்ற பரபரப்பான வழக்குகளில் விசாரணை நடத்தியவர்.
பிராந்திய ஊடகங்களிடம் பேசிய மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் தீபக் கேசர்கர், "கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லை என்பது தெரியும். அவரது மரணச் செய்தி கேட்டு நான் மட்டுமல்ல, மும்பை காவல்துறையே அதிர்ச்சி அடைந்தோம். அவர் உறுதியானவர், மனம் தளர்ந்து போகும் குணம் கொண்டவர் இல்லை. பல முக்கியமான வழக்குகளைத் தீர்த்து வைத்த சிறந்த அதிகாரி அவர்."

பட மூலாதாரம், @DrKumarVishwas Twitter
"கீமோதெரஃபிக்கு வரம்புகள் உள்ளன"
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெயந்த் படீல் பிபிசியிடம் இவ்வாறு கூறினார், "நேற்று காலை உடற்பயிற்சி மையத்தில் ஹிமான்ஹு ராயை சந்தித்தேன். புற்றுநோய் பற்றி பேசினோம். கீமோதெரஃபிக்கும் வரம்புகள் இருப்பதாக அப்போது அவர் கூறினார் "
"மிகவும் வருத்தத்தில் இருந்த அவர், புற்றுநோய் சிகிச்சை வேதனையாக இருப்பதாக கூறி வருத்தப்பட்டார். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும், உத்தரவாதம் தர முடியாது என்று சொன்னதையும் குறிப்பிட்டார்."
"ஆனால் இந்த மோசமான முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கவேயில்லை. நோயுடன் போராடி மீண்டுவருவேன் என்று சில நாட்கள் முன்பு அவர் சொன்னார்" என்று வருத்தப்படுகிறார் ஜெயந்த் படீல்.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE
காவல்துறை முன்னாள் இயக்குனர் பி.எஸ். பஸ்ரிச்சா பிபிசிடம் பேசும்போது ஹிமான்ஷு ராய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்: "காவல்துறை சேவையில் அவர் நுழைவதற்கு முன்னரே எங்களுக்கு நல்ல பழக்கம் உண்டு. நான் மும்பை போக்குவரத்து பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்தபோது என்னை சந்திக்க அடிக்கடி வருவார். பொறுமையுடன் பணிபுரியும் சிறந்த மனிதர் அவர்."
"புற்றுநோய் இருப்பது கண்டறிப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான அவர், சோகமாக இருந்தார். கடந்த மாதம் அவருடன் பேசியபோது, சிகிச்சை மிகவும் வேதனையளிப்பதாக் கூறினார். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக பல வேதனைகளையும், வலிகளையும் சகித்திருக்கும் தன்னால், இந்த சிக்கலான காலகட்டத்தை எதிர்கொள்ள முடியும் என்றும் சொன்னார்".
"ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன், முசெளரிக்கு பயிற்சிக்கு செல்வதற்கு முன் தனது எதிர்கால வாழ்க்கைத்துணையுடன் என்னை வந்து பார்த்துச் சென்ற கணம் இன்னும் என் கண்முன் பசுமையாக இருக்கிறது." என்று பஸ்ரிச்சா கூறினார்.
புற்றுநோய் தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













