You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் இடர்ப்பாடுகள்: சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மருத்துவப் படிப்பு சேர்வதற்கான நீட்(தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு) எழுதுவதற்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் குறித்து விளக்கம் கேட்டு இத்தேர்வை நடத்திய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.
ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிபிஎஸ்இ ஏற்பாடு செய்த நீட் தேர்வில் பங்கேற்க பிற மாநிலங்களுக்கு செல்ல நேர்ந்த மாணவர்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்து ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியை தாமாகவே முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டது ஆணையம். அது போன்ற ஒரு நிகழ்வில் கேரளாவில் அமைந்த மையம் ஒன்றில் தேர்வு எழுதச் சென்ற தம் மகனுடன் 500 கி.மீ. பயணம் செய்த 46 வயது தமிழக ஆண் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். அந்த ஊடகச் செய்தி உண்மையாக இருந்தால் இது தீவிரமான மனித உரிமை மீறல் பிரச்சினையை எழுப்புவதாக உள்ளது என்பதை ஆணையம் கவனிக்கிறது," என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தத் தேர்வால் மாணவர்கள் அதீத அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். எனவே தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு எவ்வித அசௌகர்யங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியது அரசின் கடமை. மாநில அரசும், சிபிஎஸ்இ-யும் மாணவர்களுக்கு மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கத் தவறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் துன்பங்கள் ஏற்பட்டன.
இதையொட்டி, தேர்வு எழுத மாணவர்கள் ஏன் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவேண்டியிருந்தது என்று விளக்கம் கேட்டு சிபிஎஸ்இ தலைவருக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியவும் ஆணையம் விரும்புகிறது," என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,685 தமிழக நீட் தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத நேரிட்டது என்று சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, மே 7-ம் தேதி வெளியான அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏன் மாநிலத்துக்குள்ளேயே அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கவில்லை என்பது குறித்து சிபிஎஸ்இ, நீட் அதிகாரிகள் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்துக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் ரயில் பயணக் கட்டணத்துடன் தலா ரூ.1,000 பண உதவி அளிக்கப்படும் என மே 5-ம் தேதி மாநில அரசு அறிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்