கர்நாடகத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு?

    • எழுதியவர், இம்ரான் குரைஷி
    • பதவி, பிபிசி

கர்நாடக தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு?

முஸ்லிம்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் தனது கொள்கையையே கர்நாடக தேர்தலிலும் கடைபிடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி (ஜே.டி.எஸ்) இவற்றில் ஒன்றையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளே அதற்கான காரணம்.

இப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சியாக காங்கிரஸை பார்க்கும் நிலை இருந்தாலும், இஸ்லாமிய சமூகத்தில் சாதி, மதத்தை விலக்கி வைத்து வாக்களிக்கும் விருப்பம் கொண்டவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு வாக்களிக்கும் சாத்தியங்களே அதிகமாக இருக்கிறது.

'கர்நாடகாவின் தெற்கு மாவட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், மாநிலத்தின் வடக்கு பகுதி, கடலோரப் பகுதிகள், மத்திய கர்நாடகா மாவட்டங்களில் இருக்கும் 150 தொகுதிகளில் ஜே.டி.எஸ் கட்சிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை' என்று அரசியல் ஆய்வாளர் அர்ஷத் அலி கூறுகிறார்.

காங்கிரசுடன் புரிந்துணர்வா?

கர்நாடகா தேர்தலில் முஸ்லிம்களின் நிலை தொடர்பாக புத்தகம் எழுதியிருக்கும் அர்ஷத் அலி, "பொதுவாக முஸ்லிம்கள் தேசிய நிலைமைகளை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்பவே வாக்களித்திருக்கின்றனர். அவர்களது பெரிய கவலை தங்கள் இனத்தினரின் பாதுகாப்புதான்" என்று கூறுகிறார்.

"முஸ்லிம்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்பது 2014 தேர்தலில் தெளிவாகிவிட்டது. பா.ஜ.கவை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளருக்கு அவர்கள் வாக்களிப்பார்கள். அந்த வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக இருந்தாலும்கூட அவர்களுக்கு கவலை கிடையாது."

கர்நாடக மக்கள் தொகை 6.1 கோடி, அதில் 12 சதவிகித்த்தினர் முஸ்லிம்கள். 60 தொகுதிகளில் அவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 17 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறது.

மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, பல இடங்களில் தனது வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறது.

ஹைதராபாத்-கர்நாடகா பிராந்தியத்தில் 60-70 இடங்களில் தங்கள் கட்சி போட்டியிடும் என, அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ- இத்தேஹத்-உல் முஸ்லீமின் (All India Council of the Union of Muslims) தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்திருந்தார்.

ஆனால் போட்டியில் இருந்து பின்வாங்கிய அவர், இறுதியில் ஜனதா தளத்தை ஆதரிப்பதாக சொல்லிவிட்டார்.

"கர்நாடக முஸ்லிம்கள், உத்தரப் பிரதேசம் அல்லது பீகார் முஸ்லிம்களிடமிருந்து மாறுபட்டவர்கள், இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் இணைந்துள்ளார்கள் என்பதோடு, அவர்கள் பிற சமூகத்தினர்களுடன் இணைந்து முடிவெடுக்கக் கூடியவர்கள்" என்று கூறுகிறார் சட்ட மேலவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் ரிஜ்வான் அர்ஷத்.

பிரித்தாளும் தந்திரம் வெற்றி பெறவில்லை

ரிஜ்வான் மேலும் இவ்வாறு கூறுகிறார், " துருவப்படுத்தும், பிரித்தாளும் முயற்சியில் இங்கு பா.ஜ.க ஈடுபடாததற்கு காரணம் பிற சமுதாயத்தினர் இங்கு ஒன்றுபட்டுள்ளனர்."

முஸ்லிம்கள் தங்கள் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என காங்கிரஸின் ரிஜ்வான், ஜனதா தளத்தின் தன்வீர் அஹ்மத் ஆகிய இருவருமே நம்புகின்றனர்.

தன்வீர் அஹ்மத் கூறுகிறார், "முஸ்லிம்களின் வாக்களிக்கும் பாணி ஒரே விதமாக இருக்கும். அது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டது, தங்களுடனான உறவை விரும்புபவர்கள் யார் என்பதைப் பொருத்தே அவர்கள் வாக்களிப்பார்கள்."

ஆனால், மைசூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் முசாஃபர் அசாதி, கர்நாடக முஸ்லிம் வாக்காளர்களை வேறு விதமாக மதிப்பீடு செய்கிறார்

ஒன்றுபோல வாக்களிக்கும் பண்பு

"இந்த முறை, மூன்று காரணங்களின் அடிப்படையில் சிறுபான்மையினர் ஒன்றுபோல், ஒரே கூட்டமாக வாக்களிப்பார்கள், முதலாவதாக, சித்தராமையாவின் அரசு முன்பிருந்ததைப் போலவே தங்களை பாதுகாக்கும். கடலோரப் பகுதிகளில் மட்டுமே இனவாத பதற்றங்கள் உள்ளன".

"இரண்டாவதாக ஜனதா தளம் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நம்பிக்கை பற்றாக்குறை. ஜனதா தளம் 2006ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தியதால், அந்த கட்சி மேல் இஸ்லாமிய சமூகத்தினருக்கு அவநம்பிக்கை நிலவுகிறது" என்று கூறுகிறார் பேராசிரியர் அசாதி.

"முஸ்லிம் வேட்பாளர்களை பா.ஜ.க தேர்ந்தெடுக்கவில்லை என்பது மூன்றாவது காரணம். ஒரேயொரு வேட்பாளர்கூட முஸ்லிம்களின் வாக்களிக்கும் பாணியை மாற்றிவிடும் சக்தி படைத்தது. இது இந்துவா அரசியல். இங்கு உத்தரப் பிரதேசம் அல்லது பிஹாரை போன்று வலுவான மாநிலப் பிரிவு பா.ஜ.கவிடம் இல்லை."

வெவ்வேறு வியூகங்கள்

காங்கிரஸின் சட்ட மேலவை உறுப்பினர் ரிஜ்வான் கூறுகிறார், "முஸ்லிம்கள் கட்சி அரசியலை விட்டு விலகி, மாறுபட்ட வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாம் என்ற சாத்தியக்கூற்றையும் நாம் மறுக்க முடியாது."

ராம்நகர் தொகுதியிலிருந்து போட்டியிடும் ஜனதா தளத் தலைவர் எச்.டி.குமாரசாமி போன்ற வேட்பாளர்கள், முஸ்லிம்களின் வாக்குகள் அனைத்தையும் அள்ளிச் செல்லலாம். ஆனால் அதற்கு அருகில் இருக்கும் சென்னபட்டினா தொகுதியில் அது அசாத்தியமானது. குமாரசுவாமி போட்டியிடும் மற்றொரு தொகுதி சென்னபட்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

"குமாரசாமிக்கு முஸ்லிம்களுடனான உறவு சுமூகமாக இருப்பதால் இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை" என்கிறார் பேராசிரியர் அசாதி. முஸ்லிம்கள் மற்றும் குருபா சமூகத்தினர் பெரும்பான்மையினராக இருக்கும் ஷிகார்புரா தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு அவர்களின் வாக்குகள் பெருமளவில் கிடைக்கும்" என்கிறார் அசாதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: