You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: "எஸ்.வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்" - ரஜினிகாந்த்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து (தமிழ்)
அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் கட்சி தொடங்குவது உறுதி என்றும், அதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் கூறிய கருத்துகள் மன்னிக்க முடியாத குற்றம் என்று ரஜினி கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டிலுள்ள 100 நகரங்களை உலகத் தரத்துக்கு மாற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்த நிலையில், அத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 9,860 கோடி ரூபாயில் வெறும் 7 சதவீதமே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நாடாளுமன்ற எம்பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுள்ள பல்வேறு நகரங்களில் நகர திட்டமிடல் அதிகாரி பதவிகள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நேற்று மனிதசங்கிலி போராட்டம் தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "நீட் பிரச்சினையாக இருந்தாலும் சரி. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அடிக்கும் கொள்ளைகளுக்கு பா.ஜ.க. அரசு துணை நிற்கிறது" என்று கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவருமான பிரேம் ஆனந்த் மீது 'போக்சோ' சட்டம் பாய்ந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.
தினமலர்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்கவையில் கொண்டுவருமாறு எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நிராகரித்தது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தமிழக அரசு பிறப்பித்துள்ள ’20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தவர்களை முன்கூட்டியே விடுதலை’ செய்வது தொடர்பான அரசாணையின்படி தன்னை விடுவிக்கவேண்டுமென்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பு வரும் 27-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்பங்களுக்கு சுமார் 69 பில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளனர். இது கடந்த 2016-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 9.9 சதவீதம் அதிகமாகும். மேலும், உலகளவில் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தை வகிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்