இந்திய ஃபேஸ்புக் பயனர் தகவல்களை அரசியலுக்குப் பயன்படுத்த முடியுமா?
- எழுதியவர், த்ருஷார் பருத்
- பதவி, பிபிசி
கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்றக் குழு முன் ஆஜாராகி தனது விளக்கத்தை வழங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிலோ அல்லது உலகின் வேறு எந்த ஒரு நாட்டிலும் எதிர்காலத்தில் வரும் தேர்தலில், தங்களது பயன்பாட்டார்களின் தகவல் அவர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்படாது என விளக்கமளித்தார்.
"இந்தியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி போன்று உலகம் முழுவதும், வெவ்வேறு நாடுகளில், முக்கிய தேர்தல்கள் நடைபெற உள்ளன. அந்த தேர்தல்களில் நேர்மையை பாதுகாக்க நாங்கள் உறுதி கொள்வோம். நாங்கள் அதை சரியாக செய்வோம் என நம்புகிறோம். 2018ஆண்டின் மிக முக்கிய நோக்கம் இதுதான்" என்று தெரிவித்தார் மார்க் சக்கர்பர்க்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மில்லியன் கணக்கான பயன்பாட்டாளர்களை சேரும் அரசியல் விளம்பரங்களை ரஷ்யர்கள் தயாரித்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே அமெரிக்காவில் நடைபெற்றதை போன்று இந்தியாவில் நடைபெறாமல் இருக்க ஃபேஸ்புக் என்ன செய்யும்?
இந்த வாரம், 5.5 லட்சத்திற்கும் மேலான இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்தது.
இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்திருந்தது.
ஆதரங்கள் இல்லை
இந்த நிறுவனம் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்காக பணியாற்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இந்தியாவில், 2019ஆம் ஆண்டிற்குள் சுமார் 500 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இணையத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் பெரிய அளவில் இணையத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரங்களை மேற்கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா அல்லது எந்த நாட்டுக்கும் நிகராக இந்தியாவில் முகநூல் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் நடைபெற்றதை போன்று வெளிநாட்டு நிறுவனத்தினாலோ அல்லது போலி கணக்குகளாலோ பயன்பாட்டாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நெருக்கடி ஃபேஸ்புக்கிற்கு உள்ளது.
ஃபேஸ்புக் எடுக்கும் முயற்சிகள் குறித்து அமெரிக்க செனட்டில் மார்க் தெரிவித்தவை:
- அரசியல் கணக்குகளை சரி பார்ப்பதற்கும், போலி கணக்குகளை நீக்குவதற்கும் ஆயிரக்கணக்கானோரை வேலைக்கு அமர்த்தப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
- அரசியல் விளம்பரங்கள் வழங்கும் விளம்பரதாரர் தகவல்கள் சரிபார்க்கப்படும்.
- பயன்பாட்டாளர்களின் பார்வைக்குப்படும் அரசியல் விளம்பரங்கள் யாரால் தயாரிக்கப்பட்டது என்பதை பயன்பாட்டாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
- போலி கணக்குகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவை அதிகரிக்கப்பது.
- ரஷ்யாவில் போலி செய்திகள் மற்று விளம்பரங்களை உருவாக்கும் நூற்றுக்கணக்கான கணக்குகளை நீக்குவது.
இதன் மூலம் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை மேற்கொள்ள ஃபேஸ்புக் ஒரு கருவியாக செயல்படாது என நம்ப முடியுமா? உறுதியாக இல்லை. ஒவ்வொரு கட்சியும் தங்களது அதரவாளர்கள் மூலம் தாங்கள் தயாரித்த செய்திகளை சட்டபூர்வமாகவே பகிர முடியும்.
தொடர்புடைய செய்திகள்:
தற்போது ஃபேஸ்புக் தனது நியூஸ் ஃபீடில் கொண்டுவந்த மாற்றமானது அரசியல் கட்சிக்களுக்கு சாதகமானதாகவே அமையும். ஏனென்றால் புதிய மாற்றத்தின்படி ஒரு பதிவோ அல்லது புகைப்படமோ எத்தனை தூரம் கமெண்டுகளையோ அல்லது ஷேர்களையோ பெறுகிறது என்பதைப் பொறுத்தே அது பிறரின் டைம் லைனில் அதிகம் தோன்றும்.
சமீப காலங்களில் ஃபேஸ்புக் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்து கொண்டிருக்க தனது மற்றொரு நிறுவனமான வாட்சப் குறித்து மவுனம் காக்கிறார் மார்க்.
ஃபேஸ்புக்கை போன்று வாட்சப்பில் வைரலாகும் செய்திகளோ அல்லது வீடியோக்களோ உருவான இடம் குறித்து தற்போதுள்ள நிலையில் தெரிந்து கொள்ள முடியாது.
போலி செய்திகள் அதில் எளிதாகப் பரவும். மேலும் அது போலி செய்தியா என்பதை உறுதி செய்வதும் புகார் அளிப்பதும் அல்லது நிறுத்துவதும் மிகவும் கடினாமாகும்.
இந்தியாவில் இம்மாதிரியான போலிச் செய்திகள் சாதி வன்முறைகள் போன்ற பல அசம்பாவிதங்களுக்கு வித்திட்டுள்ளன.
எனவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் கட்டாயத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் உள்ளது.
அரசியல் அல்லது பிரச்சனை தொடர்பான விளம்பரங்களை வழங்கும் எந்த ஒரு விளம்பரதாரர் குறித்தும் சோதிக்கப்போவதாகவும், அதிகம் பேரை கொண்ட பக்கங்களின் அட்மின் குறித்தும் ஆராய உள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












