You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் - ரஜினி
தமிழகத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வரும் நிலையில் சென்னையில் ஐ பி எல் போட்டிகள் நடைபெறுவது தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
அதற்கு அணியின் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றாலும் அங்கு பார்வையாளர்களாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கருப்புத் துணி அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை என்றும் ஆனால், இதனை தாமதப்படுத்துவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோதியை அவர் கேட்டுக் கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் தாமதப்படுத்தினால், தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடிகர் சங்கம் சார்பாக நடைபெற்று வரும் மௌனப் போராட்டத்திற்கு புறப்பட்ட அவர், நாம் போராடுவது தமிழகத்தின் ஏழை விவசாயிகளுக்கு என்றும், இவர்களின் கஷ்டத்தை கர்நாடக அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அங்குள்ள விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களில் ஒன்று இல்லை என்றாலும் உலகம் அழிந்து விடும். இயற்கையை மாசுபடுத்தி தொழிற்சாலை நடத்தினால் பணம் சம்பாதிக்கலாமே தவிர அவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், இது போன்ற தொழிற்சாலைகளால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் இதனை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியலில் கமலை எதிர்ப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் கமலை ஒருபோதும் எதிர்க்க மாட்டேன். என் எதிரி கமல் அல்ல. ஏழ்மை, லஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான் என் எதிரி" என்று தெரிவித்தார்.
அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தற்போது நியமித்திருப்பது தவறு என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்