You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்; இல்லையெனில் தள்ளி நில்லுங்கள் -கமல்
"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. " என்று தனது திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் கமல் ஹாசன்.
நேற்று, திருச்சி பொன்மலை ஜி கார்னர் இரயில்வே திடலில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்கு துவங்கியது.
பொதுக் கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன் "ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரியாகுமிடம் திருச்சி. காவிரியில் காலம் காலமாக நமது உரிமைகளை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர். பல நூறு ஆண்டுகளாக காவிரியில் நமது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் நம்மிடையே அதிகரித்துள்ளது. தீர்வு கிடைக்கும் நிலையில் சாக்கு போக்கு சொல்கின்றனர். "
"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. " என்று தெரிவித்தார்.
"நீருக்காக கெஞ்ச வைத்துவிட்டு மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருந்து கொண்டுள்ளது மாநில அரசு. இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு."
மேலும், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும். காவிரி விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி வேண்டாம். காவிரி பிரச்னையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. கர்நாடக தேர்தல் முடிந்ததும் யாரையாவது உண்ணாவிரதமோ, ஊர்வலமோ நடத்தச் சொல்லி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள். தமிழகம் அமைதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
"வீரத்தின் உச்சகட்டமே அகிம்சை"
"வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான். தொடையை தட்டுவது மட்டும் வீரம் அல்ல, தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும். காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம்."
"காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். இல்லையெனில் தள்ளி நில்லுங்கள். எங்களிடம் அதை செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்." என்றும் பேசினார் கமல்.
காவிரி பிரச்சனை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது உரைக்கு நடுவே இப்பிரச்னைக்கு தீர்வு என்ன என்று வல்லுநர்களுடன் கமல் உரையாடிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
அதில் கமல் ஹாசன் வல்லுனர்களிடம் கேள்வி கேட்டு காவிரி பிரச்சனை குறித்து விளக்கம் பெற்றார்.
''காவிரி பிரச்சனை டெல்டா பிரச்சனை இல்லை. அது தமிழகம் மொத்தத்திற்குமான பிரச்சனை. இது விவசாயிகள் பிரச்சனை இல்லை. மக்கள் பிரச்சனை'' என்றார் வீடியோவில் பேசிய ஒருவர்.
காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய உரையை முடித்த பின்னர் தனது மையத்தின் திட்டங்களையும் அறிவித்தார் கமல்.
விவசாயம், நீர் வளம், பாசனப்பரப்பு ஆகியவை செயல்படுத்த முழு வீச்சில் பணிகள் துவங்கும் என்பன போன்ற திட்டங்களை அதில் அடங்கும்.
"மேலும் தொடர்ந்த அவர், சினிமாவில் நான் அரசியல் செய்வதில்லை, அரசியலில் நடிக்கமாட்டேன்" என்றார்.
மக்களிடையே `நம்மவரிடம் நமது கேள்விகள்` என்ற வாசகம் அடங்கிய பெட்டியை கொண்டு வந்தனர். அதில் கேள்விகளை எழுதி பெட்டியில் போட்டனர். அந்த கேள்விகளில் சிலவற்றை தேடி எடுத்து குறித்து கொண்டது ஒரு குழு.
தனது உரையை முடித்த பின்னர் அந்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார் கமல். அதில், `சினிமாவில் கமல் வெற்றிகரமானவராக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவரால் அப்படி இருக்க முடியாது' என அமைச்சர் ஒருவர் கூறிய விமர்சனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அந்த கட்சியில் என்னிடம் சம்பளம் வாங்காமல் என்னுடைய மக்கள் தொடர்பாளராக அவர் இருந்து வருகிறார். அவர் என்னை எந்த அளவிற்கு விமர்சிக்கிறாரோ அந்த அளவுக்கு மக்கள் என் மீது அன்பு செலுத்துவார்கள். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது. நான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன். அவரால் இதைச் செய்ய முடியுமா?'' என்றார்.
தனியாக டி.வி சேனல் துவங்குவீர்களா என்ற கேள்விக்கு, கட்சிக்கு என்று தனி 'டிவி' சேனல் தேவை என மக்கள் நினைத்தால் அதை நோக்கி நகர்வோம். என்று கேட்கபட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல் ஹாசன்.
இறுதியாக, பறக்க நினைத்தால் பறந்துவிடலாம். ஆகாய விமானம் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஒருவர் பறந்தார். இப்போது கூட்டம் கூட்டமாக பறக்கிறோம். முதல்வராவது நிச்சயம் நடக்கும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்று முடித்தார் கமல் ஹாசன்.
பொதுக்கூட்ட மேடையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கான இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. அதில் கமலே எழுதி பாடிய பாடலும் ஒன்று.
பொதுக்கூட்ட மேடையின் பின் டிஜிட்டல் திரையில் கட்சியின் பெயர், சின்னம், பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.
மேலும் ஒரு குழு வாட்ஸ் அப் குழுவில் பொதுக்கூட்ட போட்டோக்களை அனுப்பிக் கொண்டும் இருந்தனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்