You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: ''அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது''
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து தமிழ்
தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவை விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என கட்டளையிடுகிறார்கள் பாஜக என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் என `தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
தினத்தந்தி
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன?என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, மேற்படி நோட்டுகள் எண்ணப்பட்டு, அதன் உண்மைத்தன்மை (கள்ள நோட்டு) குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் 59 நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது. மேலும் எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அவற்றைப் பாளங்களாக மாற்றி வெளியேற்றி வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி
பிரதமர் மோதியை ஆட்சியில் இருந்து வெளியேற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணி அமைய வேண்டும். நாட்டின் பிரதமராகும் அனைத்துத் தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு இருப்பதாக பிரபல வழக்கறிஞரும், வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவருமான ராம் ஜெத்மலானி யோசனை கூறியுள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர்
வங்கிகள் ஒழுங்கு முறை சட்டத்தின்படி 10 ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் உள்ள அனைத்து வகை கணக்குகள் குறித்த தகவல்களையும் ரிசர்வ் வங்கிக்கு, அனைத்து வங்கிகளும் ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும். இந்நிலையில், யாரும் கோராத 11,302 கோடி ரூபாய் 64 வங்கிகளில் உள்ளதாக ரிசர்வ வங்கி புள்ளி விவரம் கூறுகிறது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
2016-ம் ஆண்டு இந்தியாவில் முதியோருக்கு எதிராக நடந்த குற்றங்களில், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் 40.03% குற்றங்கள் நடந்துள்ளதாகவும், தமிழகத்தில் 13.5% குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன என ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது,
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்