பா. ரஞ்சித் - ரஜினி கூட்டணியின் 'காலா' திரைப்பட முன்னோட்டம் - 5 தகவல்கள் #Kaala

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் காலா திரைப்படத்தின் முன்னோட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் 164வது திரைப்படம்தான் காலா. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது. இவர்களது கூட்டணியில் உருவான கபாலி திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் 'காலா' திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மார்ச் 1 ஆம் தேதி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காலமானார்.

இதனால் திரைப்பட முன்னோட்ட வெளியீட்டை தள்ளிப்போடப்போவதாகவும், மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால், நேற்றைய தினம் மாலை சுமார் 7 மணியளவில் காலாவின் பட முன்னோட்டம் சமூக ஊடகங்களில் கசிந்து அனைவராலும் பரபரப்பாக பகிரப்பட்டது.

இதன் காரணமாக, இன்று காலை 10 மணியளவில் காலா பட முன்னோட்டத்தை தனுஷ் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவசர அவசரமாக வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, யு டியூபில் இந்தியளவில் காலா பட முன்னோட்டம் தொடர்ந்து முதல் இடத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

யூ டியூபில் சுமார் 53 லட்சம் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலா திரைப்படத்தில் நானா பட்கர், ஈஸ்வரி ராவ், ஹியுமா குரோஷி, சமுத்திரகனி, சம்பத் ராஜ், ஷியாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

காலா - ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்

1. கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அப்பெயரின் சுருக்கம்தான் 'காலா'.

2. இது ரஜினிகாந்துக்கு 164-ஆவது திரைப்படமாகும். பா.ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாகும்.

3. ரஜினிக்கு ஜோடியாக காலா படத்தில் ஈஸ்வரி ராவ் நடிக்கிறார்.

4. வில்லன் கதாபாத்திரத்தில் நானா படேகர் நடித்திருக்கிறார்.

5. பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் - ரஜினிகாந்த் ஆகியோர் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :