லண்டன் தப்பியோடிவிட்டாரா ப.சிதம்பரம் - சுப்ரமணியன் சுவாமி நையாண்டி

காங்கிரஸ் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு பயந்து லண்டன் தப்பியோடிவிட்டாரா என்ன என்று பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பியிருக்கும் சம்மன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கார்த்தி சிதம்பரம்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான எஸ்.பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.

இச்சூழலில், கார்த்தி சிதம்பரத்தின் கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அலோக் வர்மா தலைமையிலான சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு அதன் நன்மதிப்பை காப்பாற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோதியை புகழ்ந்துள்ள சுவாமி, ப.சிதம்பரம் தொடர்புடைய இந்த வழக்கில் விசாரணைகளுக்கு குறுக்கே நிற்காமல் விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்று புகழ்ந்துள்ளார்.

அண்மையில் அவர் பதிந்த ஒரு ட்வீட்டில் ப.சிதம்பரத்தை கேள்வியெழுப்பி உள்ளார்.

இன்று காலை கார்த்தி சிதம்பரம் கைதான நிலையில், ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு பயந்து லண்டன் சென்றுவிட்டாரா என்ன என்று கேள்வியெழுப்பிய சுவாமி, அப்படி ஒரு முடிவை சிதம்பரம் எடுத்திருந்தால் நான் முன்பு நினைத்திருந்ததைவிட பெரிய முட்டாளாகதான் அவர் இருப்பார் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :