You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?
காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியை குறைத்து வழங்க இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பிற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஏமாற்றத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், இதனால் தமிழக விவசயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் பிபிசி தமிழிடம் உரையாடினர்.
''தமிழகத்தை பொருத்தவரை இந்த தீர்ப்பு ஒரு பாதகமான தீர்ப்பு. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்ட தீர்ப்பே தமிழகத்துக்கு பாதிப்பு உண்டாக்கிய நிலையில், தற்போதைய தீர்ப்பில் மேலும் 14.75 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது'' என்று காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார்.
''பெங்களூரு நகர குடிநீருக்காக நீர் ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாநிலத்தில் அதிக அளவு நீர் ஆதாரம் உள்ளது. அலமாட்டி அணையில் ஆண்டுக்கு இருமுறை நீர் நிரம்புகிறது'' என்று அவர் மேலும் கூறினார்.
'கர்நாடகத்தில் கடலில் கலந்து வீணாகிறது காவிரி நீர்'
மேலும், அவர் கூறுகையில், ''கர்நாடகத்தில் மேற்கு நோக்கி ஓடும் நதிகளில் ஏறக்குறைய 2000 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அதில் இருந்து நீர் எடுத்து அம்மாநில குடிநீருக்காக பயன்படுத்தலாம். ஆனால், தமிழகத்துக்கு காவிரி நதிநீரை தவிர வேறு நீர் ஆதாரம் ஏது?'' என்று வினவினார்.
தற்போது உத்தரவிடப்பட்ட 177.25 டிஎம்சி நீராவது நிச்சயம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு , ''தீர்ப்பின் முழு விவரம் குறித்து தெரியவில்லை. முந்தைய இடைக்கால தீர்ப்பு போல் நீர் பங்கீடு அமைந்தால் விவசயிகளுக்கு சற்று ஆறுதலாக அமையும்'' என்று தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமையும்?
மேலும் இன்றைய தீர்ப்பில், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பேசுகையில், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றமே ஒரு காலக்கெடு கூறியிருக்கலாம். தற்போது குடியரசு தலைவரின் கீழ் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு இது தொடர்பான அதிகாரம் உள்ளது'' என்று கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலவரையறை குறிப்பிடப்படாததால் அது தமிழகத்துக்கு பாதகமாக அமையக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் உள்ளதாக தவறான வாதம் வைக்கப்பட்டுள்ளது. இது எப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தனியாக காவிரி டெல்டா பகுதிக்கு என்று நிலத்தடி நீர் இல்லை என்று கூறினார்.
''தற்போது வழங்க உத்தரவிடப்பட்ட நீரையாவது, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து வழங்க வேண்டும். அப்போதுதான் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறாமல் காப்பாற்றப்படும்'' என்று ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் உள்ளதா?
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சண்முகம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரின் அளவை குறைத்து 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற்படும்'' என்று தெரிவித்தார்.
''இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அதற்குரிய வழிவகைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசுகையில், ''டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் உப்புத்தன்மை மிக்கது. இதனை விவசாயத்துக்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாது. இதனை நிலத்தடி நீர் என்று எடுத்துக்கொள்ள முடியாது''.என்று சண்முகம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதங்கள் குறித்து கேட்டபோது, ''தீர்ப்பின் முழு விவரம் தெரியாததால் அது பற்றி கருத்து கூற இயலாது என்று தெரிவித்தார்.
''தற்போது குறைந்த அளவு நீரே வழங்க உத்தரவு வந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பையாவது உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை மாநில அரசு நிர்பந்தப்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய, மாநில அரசுகளை விவசாய சங்கம் கேட்டுக் கொள்வதகாவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்