You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்"
குழந்தை பருவத்தில் நொறுக்கு தீனி பொருட்கள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினம் இன்று(பிப்ரவரி 03) அனுசரிக்கப்படும் நிலையில் பிபிசி தமிழின் முகநூல் நேரலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து பேசும்போது நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கத்திற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பிற்கும் இருக்கும் தொடர்பு குறித்து விரிவாக பேசினர்.
"நொறுக்கு தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. பல முக்கிய காரணங்களில் ஒன்று நொறுக்கு தீனி. அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ள பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களை கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வரும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல், இளவயதில் புற்றுநோய் நோயாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,'' என்றார் மருத்துவர் சுரேந்திரன்.
தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஏற்படும் ரத்தப்புற்றுநோயை குணப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தும் வாய்ப்புகளும் இருப்பதாக மற்றொரு மருத்துவர் பிரேமானந்த் தெரிவித்தார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சுமார் இருபது சதவீத நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான முதன்மையான காரணமாக இருப்பது முறையற்ற உணவுபழக்கம் என்று கூறுகிறார் சுரேந்திரன்.
சுரேந்திரன்,"பல கடைகளில் தந்தூரி சிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சி மீது பல விதமான ரசாயனங்களை தடவி, எண்ணெய்யில் பொறித்து விற்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில், பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில், இந்த கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இது போன்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன,'' என்றார்.
தேவைக்கு மீறிய அளவில், பொறித்த துரித உணவுகள், பெரிய சூப்பர்மார்கெட்களில் கழிவு விலையில்(discount) விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை, இலவச பொருட்களுடன் விற்கப்படும் தீனிகள் , சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விளம்பரம் செய்யும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும் என்கிறார் அவர்.
"பெற்றோர்களின் உண்ணும் பழக்கம் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதில் இருந்து குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு புரியவைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் முதல் முயற்சி,'' என்றார் மருத்துவர் சுரேந்திரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :