You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: "கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - உதயநிதி ஸ்டாலின்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா: " கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை"
தீவிர அரசியலில் பங்கெடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, அவரின் நேர்காணலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரசுரித்துள்ளது. அந்த நேர்காணலில், "என்னை நடிகனாக பார்க்காதீர்கள். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன். கலைஞரின் பேரன். என் சிறுவயதில் என் அம்மா, தாத்தாவை பார்க்க சிறைக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். நான் கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்து செல்ல உழைப்பேன்.கமலும், ரஜினியும் எங்கள் கட்சிக்கு அச்சுறுத்தல் இல்லை." என்றுள்ளார்.
தினமணி - "ஆர்டிஎம் என்றால் என்ன?"
ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் தொடர்பான செய்தி தினமணி நாளிதழலில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இரண்டு ஆண்டு கால தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களமிறங்குவதால் இம்முறை ஏலம் களைகட்டியதாக குறிப்பிடும் அந்தச் செய்தி ஆர்டிஎம் முறை பற்றி விவரிக்கிறது. "ஆர்டிஎம் முறை, அதாவது `ரைட் டூ மேட்ச் கார்டு` என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வீரரை எந்த அணி ஏலம் எடுத்தாலும், ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அவர் ஏற்கெனவே விளையாடி வந்த அணி திரும்ப அழைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு 3 முறை அந்த வாய்ப்பை ஓர் அணி பயன்படுத்தலாம்."
தினத்தந்தி - "நாடாளுமன்றம் நாளை கூடுகிறது"
நாடாளுமன்றம் நாளை கூட இருக்கும் செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. "பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்துவது பற்றி ஆலோசிக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இதேபோல் மத்திய அரசின் சார்பிலும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.
தினமலர் - "உச்சத்தை தொடும் மின் தேவை"
கோடை காலத்தின் மின் தேவை உச்சத்தை தொடும் என மின் வாரியம் கவலை கொள்வதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தி, "வெயில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியால், கோடை காலத்தில் மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டுமோ என்ற கவலை மின் வாரியத்திடம் எழுந்துள்ளது." என்கிறது. மேலும் அந்தச் செய்தியில், "சென்ற கோடை காலத்தில், மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. இருப்பினும் மழை பெய்ததால் மின் தேவை புதிய உச்சத்தை எட்டவில்லை என்று மின்வாரிய அதிகாரி குறிப்பிட்டதாக விவரிக்கிறது அந்தச் செய்தி."
தி இந்து (ஆங்கிலம்)
பிறப்பு இறப்பு சான்றிதழுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது தி இந்து ஆங்கில நாளிதழ். இது நாள் வரை கட்டணம் இல்லாமலும் அல்லது குறைந்த கட்டணத்திலும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சேவை ரூபாய் ஐநூறு வரை உயர்ந்துள்ளது என்கிறது அந்தச் செய்தி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்