You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்கவுண்டரில் சுட்டுக்கொலை: யார் இந்த பயங்கர ரெளடி விக்கி கெளண்டர்?
பஞ்சாப் மாநிலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விக்கி கௌண்டர் மற்றும் அவரது கூட்டாளியான பிரேமா லஹோரியா ஆகியோர் பஞ்சாப் - ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹர்ஜிந்தர் சிங் புல்லார் என்பதை இயற்பெயராக கொண்ட விக்கி கௌண்டர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பலவிதமான வழக்குகள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பஞ்சாபில் உள்ள நபா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விக்கி மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சக கைதிகள் சிலர் அங்கிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி சிறையிலிருந்து தப்பிச் சென்றது அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்த சம்பவம் குறித்து அப்போது உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்ததுடன், பல காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
காவல்துறைக்கு தலைவலியாக விளங்கிய விக்கி
நபா சிறையிலிருந்து தப்பிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவந்த விக்கி அம்மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியாக விளங்கினார்.
நேற்று நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விக்கி, அம்மாநிலத்தில் எந்த ஒரு குற்ற சம்பவம் நடந்தாலும் அதற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபராக விளங்கி வந்தார்.
விக்கி கௌண்டர் தனது அனுபவங்கள் மற்றும் பல விடயங்களை ஃபேஸ்புக்கில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
விக்கி பஞ்சாபிலேயே தங்கியிருந்தாலும் கூட அம்மாநில போலீசாரால் கண்டறியப்பட முடியாத நிலையே நிலவி வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் ராஜஸ்தான்-பஞ்சாப் மாநில எல்லையிலுள்ள சுக்சைன் என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் விக்கியும் அவரது கூட்டாளியும் உயிரிழந்தனர்.
சர்ச்சையை கிளப்பிய பஞ்சாப் முதல்வரின் ட்விட்டர் பதிவு
பஞ்சாப் காவல்துறையின் இந்த நடவடிக்கையை விமர்சித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்த கருத்தொன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "தேடப்பட்டு வந்த குற்றவாளியான விக்கி கௌண்டர் மற்றும் அவரது கூட்டாளியை கொன்ற பஞ்சாப் காவல்துறைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தொடங்கும் அந்த ட்விட்டர் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பஞ்சாப் முதல்வரின் ட்வீட்டுக்கு மறுமொழியாக, "எப்போதிலிருந்து நாம் இறப்புகளை கொண்டாட ஆரம்பித்தோம்" என்றும் "ஒரு பஞ்சாபி மரணமடைந்ததற்காக மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, அந்தப் பாதைக்கு அவரை இட்டுச் சென்ற விடயத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்