ரஜினியின் அரசியல் பிரவேச பின்னணியில் இருப்பது யார்?

ரஜினி

பட மூலாதாரம், ARUN SANKAR

பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் கேள்விக்குறியாகவே இருந்து வந்த நிலையில், தற்போது அவரது அரசியல் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.

ரஜினி அரசியலுக்கு வர என்ன காரணம்?

21 ஆண்டுகளாக நடந்து வந்த நாடகத்தின் மற்றுமொரு முக்கியமான காட்சி தற்போது அரங்கேறி உள்ளதாக மணி தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் மணி

"1996 ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என மாறி மாறி பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், தற்போது அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். இவ்வளவு ஆண்டுகள் அமைதியாக இருந்த ரஜினி, தற்போது அரசியல் பிரவேசம் எடுத்திருக்க இரண்டு காரணங்கள் உண்டு'' என்றார் மணி.

"ஒன்று. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு. அவர் இருந்தவரை, தான் அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி கூறியதில்லை.

இரண்டாவது காரணம், கமல் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே அறிவித்தது. ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என முன்கூட்டியே தெரிந்துதான் கமல் முந்திக்கொண்டார்" என்று மேலும் தெரிவித்தார் பத்திரிக்கையாளர் மணி.

திரைத்துறையிலிருந்து மீண்டும் ஒரு முதலமைச்சர்?

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. இந்திய பிரஜையான எவரும் கட்சி தொடங்க இங்கு உரிமை உள்ளது" என்றார் அவர்.

"ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து அரசியலுக்கு வருகிறார்கள் என்ற தவறான பார்வை இங்குள்ளது.

1977ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு 20 ஆண்டு காலம் தீவிர அரசியலில் இருந்தார்.

அதே போல, கருணாநிதியை பொறுத்தவரை அவர் அடிப்படையில் அரசியல்வாதி, இரண்டாவதுதான் சினிமா. ஜெயலலிதா 1982ல் இருந்து தீவிர அரசியலில் இருந்து களப்பணியாற்றி 1991ல்தான் முதலமைச்சர் ஆனார்."

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

இவ்வாறு தமிழகத்தை ஆட்சி செய்த அனைவரும் அரசியல் களத்தில் தொடர்ந்து பங்களித்து, தீவிர அரசியலில் இருந்து களப்பணியாற்றிய பின்தான் முதலமைச்சர் பொறுப்பேற்றனர் என்று மணி குறிப்பிட்டார்.

சினிமாவில் பிரபலமானதால் மட்டும் இவர்கள் யாரும் ஆட்சி அமைத்திடவில்லை.

என்ன செய்திருக்கிறார் ரஜினி?

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கள அரசியலில் ஈடுபட்டுள்ளாரா? தமிழகத்தின் எந்த பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறார்? எதற்கு போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளார்? என்ற கேள்விகளையும் மணி முன்வைக்கிறார்.

ரஜினி

பட மூலாதாரம், AFP

"நடிகர் ரஜினிகாந்திற்கு எந்த ஒரு அரசியல் செயல்பாடும் இல்லை, அனுபவமும் இல்லை. அரசியல் கட்சி என்று சொன்னால், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் குறித்து எந்த விளக்கமும் அவர் அளிக்கவில்லை" என்றார்.

அரசியல் புரிதல் இல்லை

ரஜினிகாந்த் பேசிய ஆன்மீக அரசியல் குறித்து மணியிடம் கேட்டதற்கு, "ஆன்மீகமும் அரசியலும் வேறு வேறு. ஆன்மீகம் கலந்த அரசியல் என்பதே தவறான ஒரு வார்த்தை" என்றார்.

மேலும், சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடுவோம், குறைந்த நேரமே உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என ரஜினிகாந்த் கூறுவது அபத்தமானது என்றும் அவருக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும் பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டார்.

இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கி செயல்பாட்டில் இருக்கும் எந்தக்கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததில்லை என்று குறிப்பிட்ட அவர், ரஜினியை ஓர் அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.

ரஜினி

பட மூலாதாரம், SESHADRI SUKUMAR

மேலும், ஓராண்டாக நடந்துவரும் நிகழ்ச்சிகள் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியதாக ரஜினி கூறியதன் மூலம், தமிழக அரசை அவர் நேரடியாக தாக்கியுள்ளதாகவும் மணி தெரிவித்தார்.

"சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார். ஆனால் கட்சியின் பெயர் தெரியாது, கொள்கை தெரியாது, எப்போது பதிவு செய்யப்படும் என்றும் தெரியாது. அவர் செயல்பாடுகள் அனைத்தும் ஆண்டவனுக்குதான் வெளிச்சம்" என்றார் அவர்.

அரசியலில் ரஜினி: பின்னணியில் யார்?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது பெரிய கலாச்சாரமாகி இருக்க, தமிழகம் அதில் முன்னோடி மாநிலமாக உள்ளதாக மணி குறிப்பிட்டார்.

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

"பணபலம் அரசியல் குறித்து அறியாதவர் அல்ல ரஜினிகாந்த். அப்படி இருக்கையில் கட்சி தொடங்க அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இதன் பின்னால் எந்தக் கட்சி உள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும்". என்றார்.

எனினும், திரைத்துறையிலிருந்து இனி ஒரு எம்.ஜி. ஆர் அல்லது ஜெயலலிதாவை நாம் நிச்சயம் எதிர்ப்பார்க்க முடியாது என்றும் பத்திரிக்கையாளர் மணி தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :