You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் ஐ.எஸ் புதிய கிளை தொடங்க முயற்சி: காணொளி வெளியீடு
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புடன் தொடர்புடைய இணையக் கணக்குகள், காஷ்மீரில் உள்ள 'முஜாஹிதீன்களால்' உருவாக்கப்பட்ட குழு ஒன்று ஐ.எஸ் அமைப்புக்கு உண்மையுடன் இருப்போம் என்று உறுதிமொழி ஏற்கும் காணொளி ஒன்றை வெளியிட்டு வருகின்றன.
இதன்மூலம், தங்கள் கிளை ஒன்று காஷ்மீரில் இருப்பதாக ஐ.எஸ் அமைப்பு பிரகடனம் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
'#Wilayat Kashmir' (விலாயத் காஷ்மீர் - காஷ்மீர் மாகாணம்) எனும் ஹேஷ்டேக்குடன் டெலிகிராம் தகவல் பகிர்வு செயலியில் இயங்கும் ஐ.எஸ்-இன் நாஷிர் நியூஸ் குழுக்களில் அந்த 13 நிமிடம் 46 நொடிகள் ஓடக்கூடிய காணொளி பகிரப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில் உருது மொழியில் பேசும் அபு அல்-பரா அல்-கஷ்மீரி எனும் நபர் ஐ.எஸ் தலைவர் அபு-பக்கர் அல்-பாக்தாதிக்கு உண்மையுடன் இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்பதும், காஷ்மீர் பிராந்தியத்தில் இருக்கும் பிற தீவிரவாதக் குழுக்களையும் அவ்வாறு செய்யுமாறு வலியுறுத்துவதும் இடம்பெற்றுள்ளது. அவர் பேசுவதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட அல்-கொய்தாவுக்கு ஆதரவான அன்சர் காஸ்வாத்-அல்-ஹிந்த் எனும் குழுவையும் அதன் தலைவர் ஜாகிர் மூஸாவையும் ஐ.எஸ்-இல் இணையுமாறு அல்-கஷ்மீரி அழைப்புவிடுத்தார்.
பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்திய அரசின் 'நேர்மையற்ற' அமைப்புமுறை மற்றும் உள்ளூர் தீவிரவாதக் குழுக்கள் என்று கூறிக்கொள்ளும் குழுக்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீரில் இருக்கும் 'ஹிஸ்ப்-லஸ்கர்-ஜெய்ஷ்-தெரீக்' எனும் குழு அப்படிப்பட்ட 'போலியான' குழுக்களில் ஒன்று என்று அவர் கூறினார்.
முகமூடி அணிந்த சில நபர்கள் ஐ.எஸ் கொடியுடன் தெருக்களில் செல்வதும், அதில் ஒருவர் ஐ.எஸ் தலைவர் அபு-பக்கர் அல்-பாக்தாதிக்கு ஆதரவாக எழுப்பும் குரலோடு அந்தக் காணொளி முடிகிறது.
அந்தக் காணொளியில் நிட்டா ஹக் எனும் ஊடகக் குழுமம் மற்றும் அல்-கரார் எனும் ஊடகத்தின் சின்னமும் இடம்பெற்றுள்ளன. அல்-கரார் இந்தியாவின் 'நுழைவாயிலான' ஜம்மு & காஷ்மீரில் ஐ.எஸ். பிரதிநிதியாக இருக்கும் ஊடகம் என்று கூறிக்கொள்ளும் நிறுவனம் ஆகும்.
சமீப மாதங்களில் ஐ.எஸ் ஆதரவு ஊடகங்கள் காஷ்மீரில் உள்ள ஐ.எஸ் ஆதரவாளர்களை பிரபலப்படுத்தி வருகின்றன. காஷ்மீரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் ஐ.எஸ் அமைப்பின் கொடிகள் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் பகுதியில் தனது விருப்பங்கள் குறித்து குரல் எழுப்பிய ஐ.எஸ் அமைப்பு, அதில் பிறர் இணையுமாறு அழைப்புவிடுத்து ஒரு கட்டுரையும் வெளியிட்டது.
இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில், ஒரு காவலர் கொல்லப்பட்ட மற்றும் இன்னொரு காவலர் காயமடைந்த, நவம்பரில் நடந்த தாக்குதல் நிகழ்வு ஒன்றுக்கு முதல் முறையாக ஐ.எஸ் பொறுப்பேற்றது.
ஆசிய-ஐரோப்பிய எல்லையில் இருக்கும் ககாஸஸ் பகுதியில் 2015 ஜூன் மாதம் தங்கள் கிளை அமைக்கப்பட்டதாக அறிவித்தபின்னர், ஐ.எஸ் அமைப்பு புதிய கிளைகள் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
கடந்த காலங்களில் புதிய கிளைகள் குறித்த அறிவிப்பின்போது ஒரு குறிப்பிட்ட நடைமுறையை ஐ.எஸ் அமைப்பு பின்பற்றியுள்ளது.
முதலில் இவ்வாறான உறுதிமொழி ஏற்பை ஊக்கப்படுத்தி, ஒருவரை அந்தப் பிராந்தியத்திற்கான தலைவராக அறிவிக்கும். அதன் பின்னரே புதிய கிளை தொடங்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :