வடகொரியா தப்பிச்சென்று 40 ஆண்டுகள் சிறையிலிருந்த அமெரிக்க படையதிகாரி மரணம்

வட கொரியாவுக்கு தப்பியோடி, சுமார் 40 ஆண்டுகள் பியோங்யாங் சிறையில் வாடி பிறகு விடுதலையான முன்னாள் அமெரிக்க படை அதிகாரி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பின்னர். 77 வயதான சார்லஸ் ஜென்கின்ஸ் ஜப்பானில் அவருடைய கும்பத்தினரோடு வாழ்ந்து வந்தார்.

1960களில் தப்பியோடிய 4 அமெரிக்க சிப்பாய்களில் இவரும் ஒருவர். பின்னர் வட கொரியாவில் பிரசாரத் திரைப்படங்களில் மேற்கத்திய வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற இவர் மட்டுமே அந்த நால்வரில் விடுவிக்கப்பட்டவர்.

2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட ஜேம்ஸ் டெஸ்நோக் உள்பட பிறர் வட கொரியாவிலேயே இறந்துவிட்டனர்.

வட கொரியாவில் முன்னாள் சிறைக்கைதியாக இருந்த ஹிட்டோமி சோகா சார்லஸ், ஜென்கின்ஸின் மனைவி ஆவார்.

சாடோ தீவில் மனைவியோடு வாழ்ந்து வந்த சார்லஸ் ஜென்கின்ஸ் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

வீட்டிற்கு வெளியே அவர் கீழே விழுந்ததாக ஜப்பானிய ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதய பிரச்சனைகள் காரணமாக பின்னர், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தவறாகிப்போன திட்டம்

வட கொரியாவில் மிகவும் அசாதாரணமான ஆனால், கடினமான வாழ்க்கை ஜென்கின்ஸ் நடத்தி வந்தார்.

அந்த நாட்கள் நினைவில் நிற்கும் வரலாறு என்று அவர் பின்னர் அளித்த பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

1965 ஆம் ஆண்டு தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ரோந்து செல்லுகையில் தான் கொல்லப்படலாம் அல்லது வியட்நாமிற்கு சண்டையிட அனுப்ப்ப்படலாம் என்று அஞ்சிய ஜென்கின்ஸ், தன்னுடைய படை தொகுதியை விட்டுவிட்டு ராணுவம் இல்லாத மண்டலம் வழியாக வட கொரியாவுக்கு தப்பியோடுவதற்கு முடிவு செய்தார்.

வட கொரியாவிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் தஞ்சம் அடைந்து, பின்னர் சிறைக்கைதியாக அமெரிக்காவுக்கு திரும்பி விடலாம் என்று அவர் எண்ணி இருந்தார்.

ஜனவரி மாதம் ஒருநாள் அதிக பீர் மது குடிந்திருந்த ஜென்கின்ஸ் ராணுவம் இல்லாத மண்டலம் வழியாக எல்லையை கடந்து சென்று வட கொரிய சிப்பாய்களிடம் சரண் அடைந்தபோது, அவருக்கு வயது 24.

ஆனால், ரஷ்யாவோ, பிற நாடுகளோ அவருக்கு தஞ்சம் அளிக்கவில்லை. மாறாக வட கொரியா அவர்களை சிறைக்கைதிகளாக வைத்திருந்தது. .

அப்போதைய வட கொரிய தலைவர் கிம் இல்-சுங்கின் கற்பிதங்களை படிக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மொழிப்பெயர்ப்பு பணிபுரிந்தனர். ஆங்கிலம் கற்பித்தனர்.

மேற்குலகு வில்லன்களாக வட கொரியாவின் பரப்புரை திரைப்படங்களில் நடித்தபோது, அவர்கள் சிறயதொரு பிரபலங்களாகவும் உருவாகினர்.

அவரை பிடித்து வைத்திருந்தோர் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் மீது மருத்துவ செயல்முறைகளை சோதித்தாகவும் ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இவை சில நேரங்களில் தேவையற்ற அல்லது மிருகத்தனமானவையாக இருந்தன. மயக்க மருந்து இல்லாமல் ஓர் அமெரிக்க இராணுவ பச்சைக்குத்துதலை வெட்டியது உட்பட, அனைத்தையும் "நரக" அனுபவம் என்று ஜென்கின்ஸ் விவரித்திருக்கிறார்.

"ஒயாசுமி மற்றும் குட் நைட்"

இந்நிலையில், வட கொரிய உளவாளிகளுக்கு ஜப்பான் மொழி கற்றுக்கொடுப்பதற்கு ஜப்பானில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டார் சோகா.

1980 ஆம் ஆண்டு வட கொரிய அதிகாரிகள் சோகாவை ஜென்கின்ஸிடம் கொண்டு சேர்த்தனர்.

இரண்டு வாரத்தில் அவர்கள் திருணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக ஜென்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தங்களை பிடித்து வைத்திருப்போரின் மீது இருந்த வெறுப்புணர்வின் காரணமாக இணைக்கப்பட்ட இருவரும் படிப்படியாக காதலில் விழுந்தனர்.

ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லுகையில், ஜென்கின்ஸ் ஒயாசுமி (ஜப்பானிய மொழயில் இரவு வணக்கம்) என்றும் அவருடைய மனைவி ஆங்கிலத்தில் இரவு வணக்கம் என்றும் கூறுவதுண்டு என்று தன்னுடைய மலரும் நினைவில் ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் இருவரும் எந்தப் பின்னணியை சோந்தவர்கள் என்பதை என்றுமே மறக்காமல் இருந்த்தாக அவர் எழுதியுள்ளார்.

இந்த தம்பதியருக்கு மிகா மற்றும் பிரின்டா என்று இரண்டு மகள்கள். வட கொரியர்களை விட நன்றாக வெளிநாட்டு கைதிகள் நடத்தப்பட்டதாகவும் 1990களில் பஞ்சம் ஏற்பட்டபோது ரேஷன் வழங்கப்பட்டதாகவும் ஜென்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் 2002 ஆம் ஆண்டு சோகா விடுவிக்கப்பட்டார். பின்னர் 2 ஆண்டுகளுக்கு பின்னர், அவருடைய மகள்களோடு ஜப்பான் செல்ல ஜென்கின்ஸூக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜப்பானில் அவர்களின் குடும்பம் ஒன்றிணைந்தது. அவர்களின் நிலை ஜப்பானில் பரந்த அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்க படையை விட்டு வட கொரியாவுக்கு தப்பியோடிய சுமார் 4 தசாப்தங்களுக்கு பின்னர், அவர் அமெரிக்க படையில் சரணடைந்து விசாரிக்கப்பட்டார்.

முறையின்றி வெளியேறியதால் அவருக்கு இறுதியில் 30 நாட்கள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

நான் இறந்துபோக வட கொரியா விரும்புகிறது

மனைவி சோகாவின் சொந்த ஊரில் அவரது குடும்பம் குடியேறி வாழ்ந்தது. பின்னர் ஜென்கின்ஸூக்கு சுற்றுலா பூங்கா ஒன்றில் வரவேற்பாளர் வேலை கிடைத்தது.

தனிமைப்படுத்தப்பட்டதொரு நாட்டில் நீண்ட நாட்கள் வாழ்ந்து விட்டதால், நவீன உலகால் கிடைத்த கலாசார அதிர்ச்சிகளை ஜென்கின்ஸ் ஏற்று ஒத்துபோக வேண்டியிருந்தது.

கணினியை தெட்டதே கிடையாது என்று கூறுகின்ற அவர், பின்னர் இணையத்தை பற்றி கூறவும் வேண்டுமோ என்கிறார்.

படையில் அதிக பெண்கள் வேலை செய்வதையும், கறுப்பர்கள் காவல்துறையினராக வேலை செய்வதையும் பார்த்து ஆச்சரியம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் அவர் பெற்ற மருத்துவ நடைமுறைகளால், தொடர்ந்து பல உடல் சிக்கல்களால் அவர் துன்புற்றார். எனவே விடுவிக்கப்பட்டதுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று என்று ஆகஸ்ட் மாதம் லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான அவருடைய கடைசி பேட்டிகளில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாக தற்போது வாழ்கின்றபோதும், முன்பு தன்னை சிறைப்படுத்தி வைத்திருந்தவர்களை நினைத்து பயப்படுவதாகவும், அவரும்,. அவருடைய குடும்பத்தினரும் படிப்படியாக படுகொலை செய்யப்படலாம் என்று கவலை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"நான் இறந்துபோக வட கொரியா விரும்புகிறது" என்று அவர் இந்த செய்தித்தாளிடம் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :