எதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைத்தது இரட்டை இலை?

ஓ. பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

ஓ. பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மார்ச் 16, 2017-ம் தேதி, இ. மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செம்மலை ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம், வி.கே. சசிகலா, அதிமுகவின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து மனு அளித்தனர். அந்த மனுவில், இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆர்.கே நகர் தேர்தல் வருவதையொட்டி, இந்த மனுவினை உடனே விசாரிக்க வேண்டுமென்று இரண்டு அணிகளும் வலியுறுத்தி இருந்தனர். மார்ச், 23-ம் தேதி விசாரித்த தேர்தல் ஆணையம், அப்போது அளித்த தீர்ப்பில், ஓ. பன்னீர்செல்வத்தின் அணிக்கு `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (புரட்சி தலைவி அம்மா)` என்ற பெயரினையும், `மின் கம்பம்` சின்னத்தையும், சசிகலாவின் அணிக்கு `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அம்மா)` என்ற பெயரினையும், `தொப்பி` சின்னத்தையும் தற்காலிகமாக ஒதுக்கி தீர்ப்பளித்தது.

இரண்டு அணிகளுக்கும் அப்போது இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

இதற்கிடையில் பணப்பட்டுவாடாவின் காரணமாக ஆர்.கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள இறுதி தீர்ப்பில், 1969-ம் ஆண்டு காங்கிரஸ் உடைந்த போது உச்சநீதிமன்ற நீதிபதி சாதிக் அலி அளித்த தீர்ப்பு மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

கட்சியில் யாருக்கு பலம்?

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பதை வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு அது.

மனுதாரர்கள் அணிக்கு (மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செம்மலை) ஆதரவாக 1877 உறுப்பினர்கள் உறுதி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலம்:

மனுதாரர்கள் அணிக்கு 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 115 இருக்கிறார்கள். அதனால், இரட்டை சிலை சின்னத்தை இ. மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், மற்றும் எஸ். செம்மலை அணிக்கு ஒதுக்குவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :